டி20 கிரிக்கெட் போட்டி; மீண்டும் இடம்பிடித்தார் தஞ்சை பாலசுந்தர்
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பாலச்சுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது மிகப்பெரிய தாகம். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சுந்தர் தனது திறமையை வெளிகாட்டினார்.
தஞ்சாவூர்: மத்தியபிரதேசம் இந்தூரில் 8 மாநிலங்கள் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த வாலிபர் பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சுந்தர் (27). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பாலச்சுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது மிகப்பெரிய தாகம். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிகாட்டினார். இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டனர்.
தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலச்சந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் கடந்தாண்டு தமிழ்நாடு அணியில் ஏ, பி, சி என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 54 பந்துகளில் 114 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். தொடர்;து புனேவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதேபோல் கோயம்புத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு ஏ-பி அணிகளுக்கு இடையிலான மோதலில் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு பல போட்டிகளில் பங்கேற்று விருது மற்றும் கோப்பைகளை பாலசுந்தர் வென்றுள்ளார். ஆக்ராவில் தேசிய அளவில் நடந்த இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். இந்நிலையில் தற்போது மத்தியபிரதேசம் இந்தூரில் 8 மாநிலங்கள் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் தேர்வு பெற்றுள்ளார்.
இதுகுறித்து பாலசுந்தர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் பங்கேற்பது எனது திறமையை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவிகரமாக உள்ளது. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி மாற்றுத்திறனாளிகள் இந்திய அணிக்கு தேர்வு பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயிற்சி பெற்று வருகிறேன். எனது தாய் மற்றும் சகோதரர்கள், நண்பர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளனர். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். மாற்றுத்திறனாளிகளுக்காக இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.