Wrestlers Protest: நேற்று மல்யுத்த வீரர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று பிரிஜ் பூஷன் வீட்டில் சோதனை!
பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நீண்ட காலமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் அனைத்து வகையான குற்றச்சாட்டுக்கு பிறகு, பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மல்யுத்த வீரர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது உத்தரபிரதேசம் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷன் வீட்டில் இருந்த 12 பேரிடம் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
டெல்லி போலீஸ் குழு பிரிஜ் பூஷன் சரனின் பாரம்பரிய இல்லமான பிஷ்னோஹர்பூருக்கு வந்து அவரது நெருங்கிய உறவினர்கள், உறவினர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 12 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. கோண்டாவை சேர்ந்த சிலரின் பெயர்கள், முகவரிகள், மொபைல் எண்கள், அடையாள அட்டைகளை ஆதாரமாக விசாரணை குழுவினர் சேகரித்துள்ளனர். இதற்கு பிறகே இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை :
வழக்குப்பதிவு செய்தது முதலே கோண்டாவில் உள்ளவர்களின் வாக்குமூலங்களை டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மல்யுத்த வீரர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில், டெல்லி போலீசாரின் இந்த விசாரணை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
பிரிஜ் பூஷன் சிங் மீது இவ்வளவு கடுமையாக குற்றச்சாட்டுகள் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என இன்றுவரை மல்யுத்த வீரர்கள் கேள்வியாக முன்வைத்து வருகின்றனர். மறுபுறம் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்து வருகிறது.
எப்.ஐ.ஆர்:
முன்னதாக பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசில் பெண்கள் மல்யுத்த வீரர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் நீண்ட நாட்களாக எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்பி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக எம்பி மீது போக்சோ உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படவில்லை.