‛தென் இந்தியாவில் பிறந்து ‛கிரிக்கெட்’ நிர்வாகத்திற்கு வருவது எளிதல்ல...’ -இந்தியா சிமெண்ட்ஸ் என்.ஶ்ரீனிவாசன்
எங்களுக்கு சிஎஸ்கே அணி ஒரு விலை மதிப்பு இல்லாத சொத்து. எனக்கு அடுத்து அணியை வழிநடத்த என்னுடைய மகள் ரூபா குருநாத் உள்ளார்- ஸ்ரீனிவாசன்.
இந்திய தொழில்துறை மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய நபர் என்றால் அது என்.ஶ்ரீனிவாசன். இவருடைய தந்தை தொடங்கிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தற்போது 75ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இந்த நிறுவனம் தொடர்பாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாகவும் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில தளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "இந்திய வரலாற்றில் ஒரு சில நிறுவனஙகள் மட்டுமே 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனும் ஒன்று என்பதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
முதன்முதலாக என்னுடைய தந்தை மற்றும் சங்கரலிங்க ஐயர் ஆகிய இருவரும் தொடங்கும் போது இந்தியாவில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் குறைவு. 1970கள் வரை கூட நம்முடைய மொத்த உற்பத்தி 20 மில்லியன் டன் ஆக தான் இருந்தது. 1980களின் பிற்பாதியில் தான் இந்த உற்பத்தி மிகவும் அதிகம் அடைந்தது. தற்போது உலகளவில் சிமெண்ட் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா நமக்கு அடுத்த இடத்தில் உள்ளது. சீனாவை விட நாம் சற்று பின்தங்கி இருந்தாலும் விரைவில் முதலிடத்தை எட்டி பிடிக்கும் வாய்ப்பு நமக்கு பிரகாசமாக உள்ளது.
இந்திய சிமெண்ட் தொழிலை பொறுத்தவரை எந்தவித தடைகளும் இல்லாமல் இயங்கி வருகிறது. அதில் இருக்கும் ஒரே ஒரு குறை போதிய அளவிற்கு நிதியுதவி கிடைப்பதில்லை. குறிப்பாக நிதி ஈட்ட வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகளையே நாங்கள் அதிகம் நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெரியளவில் நேரடி முதலீடுகள் இந்த தொழில் இல்லை. மேலும் இத்தொழில் அதிகளவில் வரி விதிப்பு இருப்பதால் நிறையே பணம் வரி கட்டவே பயன்படுகிறது. எங்களுடைய நிறுவனம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு சிமெண்ட் தொழில் இருக்க வேண்டும் அதுவே என்னுடைய ஆசை.
சிமெண்ட் தொழில் எவ்வளவு கடினமான ஒன்றோ அதேபோல தான் கிரிக்கெட் நிர்வாகமும். அதுவும் மிகவும் கடினமான ஒன்று தான். குறிப்பாக தென் இந்தியாவில் பிறந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைமை இடத்திற்கு செல்வது அவ்வளவு எளிதல்ல. எங்களுடைய கிரிக்கெட் தொடர்பு என்னுடைய தந்தை காலத்தில் இருந்து உள்ளது. 1960களிலேயே எங்களுடை இந்திய சிமெண்ட்ஸ் அணியிலிருந்து 11 பேர் ரஞ்சி கோப்பை விளையாடி வந்தனர். அத்துடன் நாங்கள் 11-12 கிரிக்கெட் அணிகளை ஏற்கெனவே நடத்தி வந்தோம். அது தான் எங்களுக்கு சிஎஸ்கே அணியை எளிதாக நிர்வாகம் செய்ய உதவியது.
சென்னை ஒரு கிரிக்கெட் விரும்பும் இடம் என்பதால் வேறு யாரும் மிகவும் குறைவாக அணியை ஏலம் கேட்டிருந்தால் சென்னைக்கு அணி கிடைக்க வாய்ப்பு இருந்திருக்காது. அதனால் தான் நானே சென்னை அணியை எடுத்தேன். எங்களுக்கு சிஎஸ்கே அணி ஒரு விலை மதிப்பு இல்லாத சொத்து. எனக்கு அடுத்து அணியை வழிநடத்த என்னுடைய மகள் ரூபா குருநாத் உள்ளார். அவர் தற்போது சிறப்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வழிநடத்தி வருகிறார். ஆகவே அவருக்கு கிரிக்கெட் நிர்வாகம் புதிதல்ல. விரைவில் இந்திய சிமெண்ட்ஸைவிட சிஎஸ்கே அணி பெரியளவில் மதிப்பு பெற்றாலும் அதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மோடி முதல் ஏ.ஆர் ரகுமான் வரை... இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு குவிந்த வாழ்த்துக்கள்!