WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளின் ஏலத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, இதுவரை இல்லாத அளவில் பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

WPL 2026 Auction: மகளிர் ப்ரீமியர் லீக் ஏலத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவை உத்தரபிரதேச வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியை முன்னிட்டு, 5 அணிகளும் சேர்த்து 17 பேரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு, பெரும்பாலான வீராங்கனைகளை வெளியேற்றினர். இதையடுத்து நேற்று நடைபெற்ற மெகா ஏலத்தில் 277 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இந்த குழுவில் 194 இந்திய வீரர்கள் - 52 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் மற்றும் 142 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள் ஆவர். அதேநேரம், 83 வெளிநாட்டு வீராங்கனைகளில் 66 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் மற்றும் 17 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள் ஆவர். ஆனால், வெறும் 73 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருந்ததால் முன்னணி வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.
சாதனை படைத்த தீப்தி சர்மா
இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, இழுபறிக்கு மத்தியில் 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியால் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். நடப்பாண்டு ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையுடன், ஒட்டுமொத்த மகளிர் ப்ரீமியர் லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரங்கனை என்ற பெருமையையும் தீப்தி பெற்றார். ரூ.3.4 கோடி ஏலத்தொகையுடன் பெங்களூரு வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் உள்ளார்.
கோடிகளில் ஏலம்போன 11 பேர்:
- தீப்தி சர்மா, உத்தரபிரதேச வாரியர்ஸ் - ரூ.3.2 கோடி
- எமிலியா கெர், மும்பை இந்தியன்ஸ் - ரூ.3 கோடி
- ஷிகா பாண்டே, உத்தரபிரதேச வாரியர்ஸ் - ரூ.2.4 கோடி
- மெக் லேனிங், உத்தரபிரதேச வாரியர்ஸ் - ரூ.1.9 கோடி
- சினெல்லே ஹென்றி, டெல்லி கேபிடல்ஸ் - ரூ.1.3 கோடி
- ஸ்ரீ ஷரனி, டெல்லி கேபிடல்ஸ் - ரூ.1.3 கோடி
- லிட்ஃபீல்ட், உத்தரபிரதேச வாரியர்ஸ் - ரூ.1.2 கோடி
- ஜார்ஜியா வோல், உத்தரபிரதேச வாரியர்ஸ் - ரூ.1.2 கோடி
- லாரா வோல்வார்ட், டெல்லி கேபிடல்ஸ் - ரூ.1.10 கோடி
- ஆஷா ஷோபனா, உத்தரபிரதேச வாரியர்ஸ் - ரூ.1.10 கோடி
யார் இந்த ஷிகா பாண்டே?
நடப்பாண்டு மகளிர் ப்ரீமியர் லீக் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மூன்றாவது வீராங்கனையாக, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷிகா பாண்டே திகழ்கிறார். இவர் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியால் 2.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். WPL வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இந்திய பந்து வீச்சாளரான ஷிகா பாண்டே, அவரது அடிப்படை விலையை விட ஆறு மடங்குக்கு அதிக தொகைக்கு ஏலம் போனார். 36 வயதான அவர் WPL-ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஆறாவது இடத்தில் உள்ளார் (27 போட்டிகளில் 30 விக்கெட்டுகள்), அவருக்கு மேல் உள்ள ஐந்து இடங்களையும் வெளிநாட்டவர் பிடித்துள்ளனர். முந்தைய மூன்று சீசன்களிலும் கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு பாண்டே ஒரு முக்கிய காரணம் ஆகும்.




















