World Test Championship: டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. விலகும் உனத்கட்.. மாற்று வீரராக யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி காயங்களால் அவதிப்பட்டு வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் கடந்த ஐபிஎல் போட்டிகளில் காயமடைந்தனர். இதனால் இவர்கள் ஜூன் 7 ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.
ஏற்கனவே இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்தநிலையில், அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் இடம்பெற்றிருந்தனர். வருகின்ற ஜூன் மாதத்திற்குள் உனட்கட் சரியான நேரத்தில் குணமடையத் தவறினால் அவருக்குப் பதிலாக நிச்சயமாக ஒரு வீரரை நியமிக்கும். தகவலின்படி, கே.எல்.ராகுலுக்கு பெரிதாக காயம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை உனத்கட் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக இந்திய அணி யாரை அறிவிக்கலாம் என்று பார்ப்போம்.
முகேஷ் குமார்:
29 வயதான முகேஷ் குமார் முதல் தர போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். கடந்த 2022 ரஞ்சி டிராபியில் பெங்கால் அணி இறுதிப்போட்டி வரை செல்ல முக்கிய காரணமாக முகேஷ் குமார் இருந்தார். இவர் ஐந்து போட்டிகளில் 22.27 சராசரியில் 22 விக்கெட்டுகளை எடுத்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டபோது காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக முகேஷ் குமார் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டார். ஆனால், உனத்கட்டுக்கு போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. முகேஷ் முதல்தர கிரிக்கெட்டில் 39 போட்டிகளில் 21.50 சராசரியுடன் 149 விக்கெட்டுகளை வீழ்த்தி பிசிசிஐயின் கவனத்தை ஈர்த்தார்.
இஷாந்த் சர்மா:
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் இஷாந்த் சர்மா, கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா, 300 விக்கெட்களுக்கு மேல் குவித்துள்ளார். அதேபோல், இங்கிலாந்து மண்ணில் வெறும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற இருப்பதால் இஷாந்த் சர்மாவை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.
அவேஷ் கான்:
இந்திய அணிக்காக குறுகிய வடிவ தொடர்களில் விளையாடி வரும் ஆவேஷ் கான், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மத்திய பிரதேச வேகப்பந்து வீச்சாளரான இவர், மார்ச் 2023 இல் நடந்த இரானி கோப்பை போட்டியின் போது ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களில் ஆறு விக்கெட்டுகளை எடுத்தார். ரஞ்சி டிராபி 2022 தொடரின்போது 8 போட்டிகளில் 38 விக்கெட்டுகளுடன் தனது அணிக்காக முன்னணி விக்கெட் எடுத்தவர் ஆவார்.