Virat Kohli Century: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் சதம் விளாசியுள்ள விராட்..!
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சதம் அடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மேலும் ஒரு சதம் அடித்துள்ளார். ஆனால் இந்த சதம் அவர் இதற்கு முன்னர் அடித்த சதங்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரன் மெஷின் கோலி சதம் அடித்தார். கிட்டத்தட்ட 1200 நாட்களுக்குப் பிறகு, கோலி டெஸ்ட் சதம் அடித்தார். இதற்கு முன்னர், நவம்பர் 22, 2019 அன்று, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து இருந்தார்.
தற்போது அடித்துள்ள சதத்துக்காக அவர் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் காத்திருந்திருந்தார் என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இந்த காத்திருப்புக்கு மத்தியில் அவர் பல்வேறு விமர்சனங்களையும் எதிர் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக சதமும், மற்றும் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமும் விளாசியிருந்தார். ஆனால் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவர் அடித்துள்ள சதத்திற்காக 40 இன்னிங்ஸ்கள் காத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி சதம் அடித்துள்ளார். இறுதியாக 2013ல் சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார். அதாவது கோலி தனது கேரியரை தொடங்கிய நாட்களில் சதம் அடித்த பிறகு, இன்று இந்திய மண்ணில் கோலி இந்த சாதனையை எட்டியுள்ளார். இன்னிங்ஸின் 139வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்த போது சதம் விளாசியுள்ளார்.