India Catch Efficiency: இந்தியா இப்படியே ஃபீல்டிங் செஞ்சுட்டு இருந்தா? உலகக்கோப்பை ட்ரீம் ’டர்’ ’டர்’தான்!
போட்டியை வெல்ல நல்ல ஃபீல்டர்களும் நல்ல பவுலர்களும் அவசியம். போட்டியில் ஃபீல்டர்களோ பவுலர்களோ சொதப்பினால் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதுடன் வெற்றியை அவர்களதாக மாற்றி விடுவார்கள்.
கிரிக்கெட் போட்டியை பொதுவாகவே 'பேட்ஸ்மேன் கேம்’ என்பார்கள். போட்டியின் விதிகள் பலவும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாவே இருக்கும். அப்படி இருக்கும் போட்டியில் ஏதேனும் ஒரு இடத்தில் போட்டியின் மூன்றாவது நடுவரால் முடிவை எடுக்க முடியவில்லை என்றால் அப்போது முடிவை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக வழங்கலாம் என்பதும் கூட நடைமுறையில் இன்றுவரை உள்ளது.
இப்படியான ஒரு விளையாட்டை விளையாடும் ஒரு அணியின் 11 வீரர்கள் என்பவர்கள் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றியை எட்ட முடியாது. அப்படி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தும் அணியால் எப்போதும் போட்டியை வெல்ல முடியாது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என விளையாட்டின் மூன்று துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான் அந்த அணியால் போட்டியை வெல்வது மட்டும் இல்லாமல் தொடரை வெல்ல முடியும். கிரிக்கெட்டில் பொதுவாகவே ஒரு சொலவடை உள்ளது, அது, "Batsmen win you games, bowlers win you tournaments" என்பதும், ‘Catches Win Matches’ என்பதும்தான். அதாவது பேட்ஸ்மேன்கள் போட்டியை வென்று தருவார்கள் பவுலர்கள் தொடரை வென்று தருவார்கள், அதேபோல் கேட்சுகள் போட்டியை வெல்லும் என்பதும் தான் அது.
அதாவது போட்டியை வெல்ல நல்ல ஃபீல்டர்களும் நல்ல பவுலர்களும் அவசியம். இப்படியான போட்டியில் ஃபீல்டர்களோ பவுலர்களோ சொதப்பினால் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதுடன் வெற்றியை அவர்களதாக மாற்றி விடுவார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிக்கை ஒன்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இந்திய அணி கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் ஃபீல்டிங் என்பது முற்றிலும் மோசமானதாக மாறியுள்ளது என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்திய அணி ஒருநாள் தொடரில் அதிகப்படியான கேட்ச்களை தவறவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்திய அணி சிறப்பாக கேட்ச்கள் பிடிக்கும் அணியின் வரிசையில் 75.1% அளவிற்கு கேட்ச்கள் பிடித்து 9வது இடத்தில் உள்ளது. 10 வது இடத்தில் 71.2% அளவிற்கு கேட்சுகள் பிடித்துள்ளது ஆஃப்கானிஸ்தான்.
இந்த பட்டியலில் 82.8%-த்தில் இங்கிலாந்து முதல் இடத்திலும், 81.6%-த்தில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 80.9%-த்தில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து இலங்கை அணி 78.8%-த்தில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய அணி (78.5%) ஐந்தாவது இடத்திலும், மேற்கு இந்திய தீவுகள் அணி (77.9%) ஆறாவது இடத்திலும், வங்காள தேசம் (75.8%) அணி 7வது இடத்திலும் தென் ஆப்ரிக்க அணி (75.6%) 8வது இடத்துலும் உள்ளன.
கடந்த 2009ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் தோனி தேர்வுக்குழுவில் கூறியது அணிக்கு வேகமாக ஃபீல்டிங் செய்யும் வீரர்கள் தேவை எனக் கூறியிருந்தார். இது மூத்த வீரர்கள் மந்தமாக ஃபீல்டிங் செய்வதாக புரிந்து கொள்ளப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் தோனி கூறியது அன்றைக்கு மிகவும் சரியான கருத்தாக அமைந்தது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும்போது, இந்திய அணியில் சிறந்த பீல்டர்களாக யுவராஜ் சிங், ரெய்னா, தோனி, கம்பீர், விராட் கோலி, ஜாகீர் கான் போன்ற சிறந்த பீல்டர்கள் இருந்ததும் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள அறிக்கையைப் போலவே இந்திய அணியின் நிலை வரும் உலகக்கோப்பைத் தொடரிலும் தொடருமானால் இம்முறையும் இந்திய அணிக்கு உலகக்கோப்பை எட்டாக்கனியாக மாறிவிடும் என கிரிக்கெட் ரசிகர்கள் வேதனையுடன் பேசிவருகின்றனர்.