டி20 பவர்பிளேவில் தொடர்ந்து சொதப்பும் இந்திய பந்து வீச்சாளர்கள்- தரவுகள் கூறுவது என்ன?
கடைசியாக நடைபெற்றுள்ள 10 டி20 போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவில் மிகவும் சொதப்பியுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இனி வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி நாக் அவுட் செல்லும் வாய்ப்பு சற்று குறைவு தான். இந்தச் சூழலில் இன்று இந்திய அணி சுழல் பலம் வாய்ந்த ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி சமீப காலங்களாக டி20 போட்டிகளில் பந்துவீச்சில் சற்று திணறி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சு மிகவும் மோசமக அமைந்தது. பேட்டிங்கும் மோசம் என்றாலும் பந்துவீச்சும் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக 2021ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள டி20 போட்டிகளில் இந்திய அணி பந்துவீச்சில் சற்று தடுமாறியே வருகிறது. அப்போது பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்ததால் அது அணிக்கு பெரிய பாதிப்பை தரவில்லை.
ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாததால் அது மிகவும் பெரிய சிக்கலாக அமைந்தது. ஏனென்றால் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து டி20 தொடர் முதல் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து போட்டி வரை இந்திய அணி 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 10 போட்டிகளிலும் பவர்பிளே ஓவர்களில் இந்திய அணி வெறும் 8 விக்கெட் மற்றும் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பவர்பிளேவில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்கள் பந்துவீசும் அணிக்கும் பேட்டிங் செய்யும் அணிக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய அணி 10 போட்டிகளில் பவர்பிளேவில் வெறும் 8 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளது எதிரணிக்கு நல்ல சாதகாம அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக நம்முடைய பேட்ஸ்மேன்கள் குறைவான ஸ்கோர் அடித்திருக்கும் போது முதல் 6 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால் அது எதிரணிக்கு எளிதாக அமைந்துவிடும். நடப்பு டி20 உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மொத்தம் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளது. அந்த இரண்டு விக்கெட்டையும் பும்ரா மட்டுமே வீழ்த்தியுள்ளார். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் விக்கெட் வீழ்த்தவில்லை.
Martin Guptill’s wicket was India’s 8th Powerplay wicket in 2021. India had taken 7 Powerplay wickets in 9 matches prior to today at a bowling average of 58.#T20WorldCup #INDvNZ
— The CricViz Analyst (@cricvizanalyst) October 31, 2021
ஆகவே இன்றைய போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட இந்திய வேகப்பந்து கூட்டணி பவர்பிளேவில் விக்கெட் எடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். பவர்பிளே விக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்று தற்போது இந்திய அணி உணர்ந்து இருக்கும். எனவே ஆஃப்கானிஸ்தான் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் நிச்சயம் பவர்பிளேவில் கலக்குவார்கள் என்று நம்புவோம்.
மேலும் படிக்க: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்காக களமிறங்குகிறாரா அஸ்வின்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..