Ind vs Afg Dream11 Prediction | நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்காக களமிறங்குகிறாரா அஸ்வின்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
IND vs AFG: உலககோப்பையில் இன்று ஆப்கானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
IND vs AFG: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று நேருக்கு நேர் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பன்மடங்கு பலமான அணி என்றாலும், கடந்த இரு போட்டிகளின் தோல்வி இந்திய அணியினரை மனதளவில் பாதித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற கடந்த இரு போட்டிகளில் இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் இந்திய அணிக்கு எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. இதனால், கடந்த போட்டிகளில் இருந்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்திய அணி புத்துணர்ச்சியுடன் இந்த போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த போட்டிகளில் முன்னணி வீரர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு அணியின் ப்ளேயிங் லெவன் சரியாக அமையவில்லை என்பதே.
இதனால், அபுதாபியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டிகளில் ஒன்-டவுன் இறங்கி ஆடிய துணை கேப்டன் ரோகித்சர்மா மீண்டும் தனது ஆஸ்தான இடமான தொடக்க வரிசையில் களமிறங்க உள்ளார். அவருடன் இந்த முறை ஆட்டத்தை கே.எல்.ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் இஷான்கிஷான் தொடங்க உள்ளார். கேப்டன் கோலி தனது ஆஸ்தான இடமான நம்பர் 3ல் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்கான நான்காவது இடம் தற்போது வரை தடுமாறிக்கொண்டு வரும் நிலையில், அந்த இடத்தில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட உள்ளார்.
இவற்றை எல்லாம் விட கடந்த இரு போட்டிகளில் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டிருந்த உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின் மீண்டும் இன்று இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். அஸ்வின் உள்ளே வருவதால் கடந்த இரு போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட வருண் சக்கரவர்த்தி பெஞ்சில் அமர வைக்கப்பட உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையைப் பொறுத்தமட்டில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் வேகத்திற்கு துணை சேர்க்க உள்ளனர். புவனேஷ்குமார் இந்த போட்டியிலும் களமிறக்கப்படமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வினுக்கு துணையாக ஜடேஜா களமிறங்க உள்ளார். பிரதான ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா நடுவரிசையில் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா கடந்த போட்டியில் 23 ரன்கள் எடுத்ததுடன் ஒரு ஓவர் வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக களமிறங்கும் அஸ்வின் இந்த போட்டியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அஸ்வின் இந்திய அணிக்காக இதுவரை46 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த போட்டிகளில் 52 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 123 ரன்களையும் குவித்துள்ளார். இந்திய அணிக்காக 2010ம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அஸ்வின், கடைசியாக 2017ம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி மேற்கிந்தீய தீவுகள் அணிக்கு எதிராக டி20 போட்டியில் ஆடியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்