T20 World Cup: யாரு படம் ஓடினாலும் ஹீரோ நான் தான்; யாருமே நெருங்க முடியாத தோனியின் சாதனை..!
T20 World Cup: இதுவரை நடந்துள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் மற்றும் அவர்கள் செய்த சாதனையைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
T20 World Cup: இதுவரை நடந்துள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் மற்றும் அவர்கள் செய்த சாதனையைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஐசிசி டி20 உலககோப்பை போட்டித் தொடர் இந்த மாதத்தின் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தகுதிச் சுற்று போட்டிகளும் அதன் பின்னர் லீக் போட்டிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளன. தகுதிச் சுற்றில் தகுதி பெறும் நான்கு அணிகள் மற்ற எட்டு அணிகளுடன் இணைந்து சூப்பர் 12 சுற்றில் இருந்து லீக் தொடர் ஆரம்பம் ஆகும்.
2007 முதல் ஐசிசி உலககோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு டி20 உலககோப்பை போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் மேற்கு இந்திய அணிகள் இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
முதல் டி20 உலககோப்பையை இந்திய அணி கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி தலைமையில் வென்றது. அதன் பின்னர் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வில்லை. தோனி தலைமையிலான அணி, விராட் தலைமையிலான அணி என ஒவ்வொரு முறையும் இந்திய அணி முயன்றும் ஏமாற்றமே அடைந்தது. தற்போது கேப்டன் ரோகித் தலைமையிலான அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் இறங்கவுள்ளது.
கிரிக்கெட் போட்டியைப் பொறுத்த மட்டில் பலரும் அதனை ஒரு சோம்பேறி விளையாட்டு என கிண்டல் செயவர். அந்த கிண்டலுக்கு ஏற்றவாரும் தான் அந்த விளையாட்டு உள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, பந்து வீசும் போது மட்டும் பந்து வீச்சாளர் தீவிர விளையாட்டை வெளிப்படுத்தினால் போதும், பேட்டிங் செய்யும் போது மட்டும் முனைப்புடன் இருந்தால் போதும் என்கிறார்கள். ஆனால் 20 ஓவர் போட்டியோ, 50 ஓவர் போட்டியோ அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டோ எப்போதும் முனைப்புடன் களத்தில் இருப்பவர் விக்கெட் கீப்பர் மட்டும் தான். அப்படிப்பட்ட விக்கெட் கீப்பர்கள் இதுவரை நடந்துள்ள டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் மட்டும் அவர்கள் செய்த சாதனை குறித்து இங்கு காணலாம்.
1. எம்.எஸ். தோனி (2007 - 2016)
இந்திய அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர், தி கிரேட் ஃபினிஷர் என்பதோடு ’’கேப்டன் கூல்’’ என்று அழைக்கப்பட்ட எம்.எஸ். தோனி தான் டி20 உலககோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 2007 முதல் 2016 வரை நடந்த டி20 உலககோப்பை போட்டிகளில், 32 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவர் 21 கேட்சுகளும் 11 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார்.
2. கம்ரன் அக்மல் (2007 - 2014)
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இவர் அவர் 2007 முதல் 2014 வரை நடந்த டி20 உலககோப்பை போட்டிகளில், 30 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவர் 12 கேட்சுகளும் 18 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார். அக்மலும் தோனியும் விக்கெட் வீழ்த்தியதில் சராசரியாக போட்டிக்கு ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
3. தினேஷ் ரம்தின் (2007 - 2016)
வெஸ்ட் இண்டீஸ் அணையைச் சேர்ந்த தினேஷ் ரம்தின் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் இவர் 2007 முதல் 2016 வரை நடந்த டி20 உலககோப்பை போட்டிகளில், 29 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவர் 18 கேட்சுகளும் 9 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. குமார் சங்ககராப் (2007 - 2014)
இலங்கை அணியின் விக்கெட் கீப்பராக மட்டும் இல்லாமல் அணியின் கேப்டனாகவும் இருந்தவர் குமார் சங்ககரா. இவரது தலைமையில் இலங்கை அணி 2014ஆம் ஆண்டு டி20 உலககோப்பையை வென்றது. இவர் 2007 முதல் 2014 வரை நடந்த டி20 உலககோப்பை போட்டிகளில், 31 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவர் 12 கேட்சுகளும் 14 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார்.
5. முஸ்தஃபீர் ரஹிம் (2007 - 2021)
பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த முஸ்தஃபீர் ரஹிம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் 2007 முதல் 2021 வரை நடந்த டி20 உலககோப்பை போட்டிகளில், 33 போட்டிகளில் 26 இன்னிங்ஸில் விளையாடி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவர் 10 கேட்சுகளும் 9 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியின் தோனியின் சாதனை என்பது ”யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்” என்பதைப் போல், யாரும் எளிதில் நெருங்க முடியாத சாதனையாக உள்ளது.