T20 World Cup 2022: டி20 உலகக் கோப்பை தொடருக்கு புதிய ப்ளான் வகுத்த பயிற்சியாளர் டிராவிட்.. என்ன திட்டம்?
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் களமிறங்குகிறது. அதன்பின்னர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய அணி அடுத்த மாதம் 9ஆம் தேதி ஆஸ்திரேலிய செல்லும் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணி விரைவாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்று கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலிய செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
One title 🏆
— BCCI (@BCCI) September 12, 2022
One goal 🎯
Our squad 💪🏻#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/Dw9fWinHYQ
அதன்படி இந்திய அணி வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூடுதல் பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யுமாறு பிசிசிஐ உடன் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு ஏற்கெனவே அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் இரண்டு பயிற்சி போட்டிகள் உள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்தச் சூழலில் அதற்கு முன்பாக ஒரு சில அணிகளுடன் இந்திய அணிக்கு பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. ஆகவே இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு உடன் காத்திருக்கின்றனர்.