IND vs ZIM T20I Series: ரோஹித், ஹர்திக் இல்லை.. ஜிம்பாப்வே எதிரான தொடருக்கு கேப்டனாக ருதுராஜ்..? வெளியான தகவல்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் ஓய்வு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நடந்து வரும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா உட்பட இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அணியின் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் பணிச்சுமை காரணத்திற்காக பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. மேலும், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்குப் பிறகு, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் ஓய்வு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவியேற்க இருக்கும் கௌதம் கம்பீர், வருகின்ற ஜூலை 6ம் தேதி தொடங்கும் இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடருடன் தனது பதவியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யாருக்கு அணியில் இடம்..?
இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் நடந்து முடிந்த ஐபிஎல் 2024ல் சிறந்து விளங்கிய 7 வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தற்போது பயிற்சி பெற்று வரும் பல வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்களும் இந்த இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஹாங்சோ 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட், வரவிருக்கும் இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்தியாவை வழிநடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் பதவிக்கு குறுக்கே வரும் சஞ்சு சாம்சன்:
இருப்பினும், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2024 அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சனுக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இடையே கேப்டன் பதவியில் கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால், ஷ்ரேயாஸ் ஐயருக்கும் கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளிவருகின்றன. ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரராகவும், கேப்டனாகவும் சாம்சன், சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக வரவிருக்கும் இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரில் கேப்டன் பதவிக்கு ஒரு வலிமையான போட்டியாளராக ஆக்குகின்றன.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது என்சிஏவில் இல்லை. ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி, அபிஷேக் சர்மா, ரியான் பராக், மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள் உள்ளிட்ட ஒரு சிலர் ஜிம்பாப்வே டி20 தொடருக்கு செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடருக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா, யாஷ் தயாள், கலீல் அகமது, அவேஷ் கான், மயங்க் யாதவ், யுஷ்வேந்திர சாஹல், ரவிஷ்வேந்திர சாஹல், ரியான் பராக், ரஜத் படிதார், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்).