(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!
ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இளம் வீரர்களை புகழ்ந்த ரோகித் சர்மா:
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது 2 – 3 நாட்களுக்கு மேல் விளையாடுவதில்லை. இப்போது நாங்கள் 5 நாட்களும் விளையாடுவதன் முக்கியத்துவத்தை புரிந்துள்ளோம். அதில் நன்றாக விளையாடிய நாங்கள், எதிரணி மீது அழுத்தம் காட்டினோம். எங்களுடைய பந்து வீச்சில் கிளாஸ் இருப்பதால் பொறுமையாக செயல்படுவோம் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. நிறைய அனுபவத்தைக் கொண்ட ஜடேஜாவுடன் இடது – வலது கை கலவையை வேண்டுமென விரும்பியதால் சர்பராஸ் கானை களம் இறக்கினோம்.
சர்பராஸ் கான் எப்படி விளையாடுவார் என்பதை பார்த்தோம். அனைத்தையும் நாங்கள் கணக்கிட்டு பின்னர் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங் வரிசையில் செயல்பட்டோம். நிறைய திருப்புமுனைகள் இருந்தது. இந்தியாவில் வெல்வதற்கு டாஸ் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். எங்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய போராட்டத்தை காண்பித்தனர். இந்த நேரத்தில் முக்கிய பந்து வீச்சாளர்கள் இல்லாமல் நாங்கள் விளையாடினோம் என்பதை மறக்கக்கூடாது. பேட்டிங்கிலேயே பாதி வேலை முடிந்தது என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் அசத்தினார்கள்” என்று கூறியுள்ளார். இச்சூழலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது போட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிரடி காட்டிய இந்திய அணி:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதில் 196 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 131 ரன்கள் குவித்தார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா 225 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 112 ரன்களை குவித்தார்.
இவ்வாறாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்151 பந்துகள் களத்தில் நின்று 23 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 153 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் டாம் ஹார்ட்லியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் தன்னுடைய 500-வது விக்கெட்டை எடுத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இதில் 430 ரன்களை எடுத்து இந்திய அணி டிக்ளர் செய்தது. அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.இச்சூழலில் 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்பரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க இங்கிலாந்து அணி 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இவ்வாறாக இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.
மேலும் படிக்க: Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” - மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!
மேலும் படிக்க:Ashwin: அஸ்வினுக்கு ஆதரவாக பிசிசிஐ வெளியிட்ட பதிவு; அப்படி என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?