Fastest Test 100: ரோகித் சர்மாவின் மிரட்டல் அடி.. டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய அணி.. குவிந்த சாதனைகள்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த அணி என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய சாதனைகளை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த அணி என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய சாதனைகளை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி படைத்துள்ளது.
இந்திய அணி அதிரடி:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 நாள் ஆட்டம் முடிந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படுகிறது. நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி, இங்கிலாந்து தற்போது பின்பற்றி வரும் பேஸ்பால் கிரிக்கெட் எனும் அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி, 181 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.
ரோகித் மிரட்டல் அடி:
இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது அதிவேகமான அரைசத்தை ரோகித் சர்மா பூர்த்தி செய்தார். அதன்படி, இந்த போட்டியில் வெறும் 35 பந்துகளிலேயே அரைசதம் எட்டினார். இந்த இன்னிங்ஸில் அவர் 44 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 57 ரன்களை குவித்தார். முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 47 பந்துகளில் அரைசதம் விளாசியதே அவரது அதிவேக டெஸ்ட் அரைசதமாக இருந்தது.
உலக சாதனையை தகர்த்த இந்திய அணி:
இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய அணி என்ற இலங்கையின் சாதனையை இந்தியா தகர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் - ரோகித் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 11.5 ஓவர்களில் 98 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. முன்னதாக, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 13.2 ஓவர்களில் இலங்கை அணி 100 ரன்களை விளாசியதே, டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணியின் அதிவேக சதமாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணி தகர்த்துள்ளது.
மிரட்டலான ஓபனிங்:
இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அறிமுக வீரரான ஜெய்ஷ்வால் கூட்டணி, களமிறங்கிய அனைத்து இன்னிங்ஸ்களிலும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்த ஜோடி, வெறும் 5.3 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது. இதன் மூலம், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. அதோடு, இந்த தொடரில் ரோகித் சர்மா - ஜெய்ஷ்வால் கூட்டணி 466 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மொத்தமாக அதிக ரன்களை குவித்த இந்திய தொடக்க வீரர்கள் எனும் சாதனையையும் ரோகித் - ஜெய்ஷ்வால் கூட்டணி படைத்துள்ளது.