Foreign Coaches: தனித்தனி வெளிநாட்டு பயிற்சியாளர்கள்.. புதிய யுக்தியை கையில் எடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கென தனி வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தலைமை பயிற்சியாளர்கள் நியமிப்பதும் நீக்குவதும் , கேப்டன் பதவியை கொடுப்பதும் விடுவிக்கப்படுவதும், தேர்வுக்குழு நியமிப்பதும் கலைப்பதும் என அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிதான்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை. மேலும், பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு கூட நுழைய முடியவில்லை. இதையடுத்து, பாபர் அசாமுவை பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வருகின்ற காலத்தை மனதில்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அணியின் செயல்திறனை மேம்படுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கென தனி வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
இந்த பதவிகளுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன் ஆகியோர் முக்கிய நபர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ விளம்பரத்தை கடந்த சனிக்கிழமை பிசிபி வெளியிட்டுள்ளது. அதில், ஆர்வமுள்ள வெளிநாட்டு மற்றும் உள்ளூர் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொருத்தமான விண்ணப்பதாரர்கள் உள்நாட்டு, சர்வதேச அல்லது உரிமையாளர் அணிகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருட பயிற்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, வேட்பாளர் குறைந்தது இரண்டு அணிகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிக அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யார் யார் நியமிக்கப்பட வாய்ப்பு..?
விளம்பர விண்ணப்பங்களை அழைத்திருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேரி கிர்ஸ்டன் மற்றும் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் நீண்ட கால அடிப்படையில் நியமிக்கப்படுவதற்கு விண்ணப்பிப்பதில் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.
முன்னதாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கிர்ஸ்டன், டி20 மற்றும் ஒருநாள் வடிவங்களுக்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கில்லிஸ்பி பாகிஸ்தான் டெஸ்ட் வடிவத்தில் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி விதிமுறைகளின்படி அனைத்தையும் செய்து வருவதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து முன்னேற்றங்கள் குறித்தும் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக வருவதாகவும் கூறப்படுகிறது.
பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு சரியான ஒப்பந்தம் மற்றும் பதவிக்காலம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் எந்த பயிற்சியாளரின் விருப்பத்திற்கும் மாறாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்பட கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது.
சிறிது காலத்திற்குப் பிறகு பிசிபி தேசிய அணியின் பயிற்சியாளர் பதவிகளுக்கான முறையான விளம்பரத்தை வெளியிடுவது இதுவே முதல் முறை. ஜகா அஷ்ரப் மற்றும் நஜாம் சேத்தி ஆகிய இரு தலைவர்களின் பதவிக்காலத்தில் எவ்வித விளம்பரமும் இன்றி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதற்கு முன்பே, பிசிபியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா எந்த விளம்பரமும் இல்லாமல் வெளிநாட்டு ஆலோசகர்களை குழுவுடன் நியமித்தார்.