ODI WC 2023 Virat Kohli: சேஸிங்கில் அசத்துவாரா சேஸ் மாஸ்டர் கிங் கோலி? அகமதாபாத் மைதானத்தில் இதுவரை எப்படி?
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விராட் கோலியின் புள்ளி விவரங்கள் இதோ.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 12 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 14) உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
இந்த போட்டியில் கிரிக்கெட்டில் எதிரிநாடக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் எதிர் அணிகளை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறது. இதனிடையே இன்றைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை எப்படியும் சுவைத்துவிட வேண்டும் என்று இரு அணிகளும் மோதி வருகிறது.
பாபர் VS கோலி:
அதநேரம் இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு முன்னதாக ஐசிசி ’எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இன்றைய போட்டியில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ‘கிங்’ யார் என்று, இந்திய அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.
இதனிடையே, ஒரு நாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் மோதுவது இது எட்டாவது முறையாகும். இதில் கடந்த ஏழு போட்டிகளிலுமே இந்திய அணிதான் வெற்றி மகுடத்தை சூடி உள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பார்க்கப்படும் விராட் கோலி நரேந்திர மோடி மைதானத்தில் எப்படி விளையாடி உள்ளார் என்ற புள்ளி விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்:
அகமதாபாத் மைதானத்தில் இதுவரை கோலி:
கிங் கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 18 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். இதில் அவரின் பேட்டிங் சராசரி 48.57. அவர் அடித்துள்ள மொத்த ரன்கள் 680 ஆகும். இதில் 4 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும்.
விராட் கோலி விளையாடிய 18 இன்னிங்ஸில் 4 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 186 ரன்கள் குவித்தார் என்பது குறிபிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிரட்டல்:
இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு எதிராக விராட் கோலி சுழன்று சுழன்று விளையாடி உள்ளார். அதன்படி, 15 இன்னிங்ஸ்களில் 36.37 என்ற சராசரியில் 541 பந்துகளில் 291 ரன்களை குவித்துள்ளார் கோலி. அதில் மொத்தம் 18 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம்.
வேகப்பந்து வீச்சுகளை விளாசிய கோலி:
சுழற்பந்துகளை மட்டும் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் விராட் கோலி இந்த நரேந்திர மோடி மைதானத்தில் விளாசி உள்ளார். அதன்படி, 17 இன்னிஸ்களில் 77.80 என்ற அற்புதமான சராசரியில் 370 பந்துகளில் மொத்தம் 389 ரன்களை குவித்துள்ளார். இதில் 44 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும்.
கோலியை நம்பும் இந்தியா:
வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை கோலி இந்த மைதானத்தில் விளாசி தள்ளியதால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க: ODI WC 2023 IND Vs PAK: நிரம்பி வழியும் நரேந்திர மோடி மைதானம்.. எங்கு பார்த்தாலும் நீலம் - ஆர்ப்பரிக்கும் இந்திய ரசிகர்கள்!
மேலும் படிக்க: IND vs PAK Score LIVE: பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ்.. உற்சாகத்தில் இந்தியா..!