Muhamed rizwan | அரையிறுதி போட்டிக்கு முன்பு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான்.. உண்மையை உடைத்த டாக்டர்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக பாகிஸ்தான் அணியின் மருத்துவர் நஜீப் சூம்ரோ தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து மாற்றப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டு தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி 20 உலகக்கோப்பை 2021 தொடரில் முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற 2 வது அரையிறுதி போட்டியில் பலம் மிகுந்த ஆஸ்திரேலியா அணியும், இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதினர். முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 39 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பௌண்டரி உள்பட 67 ரன்கள் குவித்து ஸ்டார்க் பந்து வீச்சில் ஸ்மித்திடம் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பகர் ஜாமான் 32 பந்துகளில் 55 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 177 ரன்கள் குவித்து டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்களும், ஸ்டோய்னிஸ் 40 ரன்களும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 41 ரன்களும் பெற்றிந்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சதாப் கான் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அரை சதம் அடித்ததன் மூலம் இந்தாண்டில் மட்டும் டி 20 தொடரில் தனது 10 அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதேபோல், இவர் ஒரு சதம் உள்பட 1,033 ரன்கள் குவித்து ஒரு ஆண்டில் டி 20 வரலாற்றில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக பாகிஸ்தான் அணியின் மருத்துவர் நஜீப் சூம்ரோ தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்பு, கடந்த நவம்பர் 9 ம் தேதி தீவிர நெஞ்சு அலர்ஜி காரணமாக அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், உடனடியாக குணமான அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்கி அரை சதம் அடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.