Shubman Gill: தோனி சாதனையை சமன் செய்த சுப்மன்கில்.. என்னய்யா சொல்றீங்க?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய சுப்மன்கில் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால், சுப்மன்கில்லின் அபார சதத்தால் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சுப்மன்கில் அபார சதம்:
இந்திய அணிக்காக இன்று ஆட்டத்தை தொடங்கிய ஜெய்ஸ்வால் 175 ரன்களுக்கு ரன் அவுட்டாகிய நிலையில், கேப்டன் சுப்மன்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதிஷ் ரெட்டி, துருவ் ஜோரல் ஒத்துழைப்பு தர அபாரமாக ஆடிய கேப்டன் சுப்மன்கில் சதம் விளாசினார். அவர் இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் 196 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் சதம் விளாசிய சுப்மன்கில்லிற்கு இது 9வது டெஸ்ட் சதம் ஆகும். இன்றைய சதம் மூலமாக சுப்மன்கில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, கேப்டனாக இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதம் அடித்தோர் பட்டியலில் தோனி, கங்குலியை சமன் செய்துள்ளார்.
கோலிதான் டாப்:
டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லிற்கு இது 5வது சதம் ஆகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் சவ்ரவ் கங்குலி, தோனி, பட்டோடி ஆகிய 3 பேரும் கேப்டனாக 5 சதங்கள் விளாசினார். இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
விராட் கோலி 20 சதங்களுடன் இந்த பட்டியலில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முகமது அசாருதீன் 9 சதங்களுடன் 3வது இடத்திலும், டெண்டுல்கர் 7 சதங்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
அதிக சதம் யார்?
தற்போது தோனி, கங்குலி சாதனையை சமன் செய்துள்ள சுப்மன்கில் மற்றொரு சாதனயையும் படைத்துள்ளார். அதாவது, விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக சதம் விளாசியவர் என்ற வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார்.
அதாவது, 2017ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டில் தலா 5 சதங்களை டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி விளாசியுள்ளார். அவரது சாதனையையும் சமன் செய்துள்ளார். ஆனால், கோலி இந்த சாதனையை 2 முறை படைத்துள்ளார். சுப்மன்கில்லும் அதை செய்வாரா? என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கோலி, ரோகித் போல ஜொலிப்பாரா?
சுப்மன்கில்லை இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பிசிசிஐ தயார் செய்து வருகிறது. அவரை அடுத்த கோலியாக ரசிகர்களிடம் கொண்டு செல்லவும் அணி நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. இதன் எதிரொலியாகவே ரோகித்சர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு சுப்மன்கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது.
26 வயதான சுப்மன்கில் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 697 ரன்களை எடுத்துள்ளார். 9 சதங்களும், 1 இரட்டை சதமும், 8 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 269 ரன்கள் எடுத்துள்ளார். 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 அரைசதங்கள், 8 சதங்கள், ஒரு இரட்டை சதம் விளாசியுள்ளார்.
28 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதம், 1 சதம் என மொத்தம் 705 ரன்கள் எடுத்துள்ளார். 118 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 866 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 26 அரைசதங்கள், 4 சதங்கள் அடங்கும். தற்போது முதல் இன்னிங்சில் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட்டை இழந்து தடுமாறி ஆடி வருகிறது.



















