ODI Hatricks: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஹாட்ரிக் விக்கெட்ஸ் எடுத்த அணிகள்.. முதலிடத்தில் எந்த அணி தெரியுமா?
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய அணிகளின் விரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய அணிகளின் விரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே வீரர் வெஸ்லே மாத்வெர் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டானது, ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 50வது ஹாட்ரிக் ஆகும்.
ஹாட்ரிக் விக்கெட்:
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரரால் அடுத்தடுத்து வீசப்படும் 3 பந்துகளிலும், விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டால் அது ”ஹாட்ரிக் விக்கெட்ஸ்” என அழைக்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முறையாக 1982ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி வீரர் ஜலாலுதின் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதைதொடர்ந்து தற்போது வரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 50 முறை ஹாட்ரிக் விக்கெட் நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதிக ”ஹாட்ரிக் விக்கெட்ஸ்” வீழ்த்திய நாடுகள்:
1. இலங்கை - 9
2. பாகிஸ்தான் - 8
3. ஆஸ்திரேலியா - 6
4. வங்கதேசம் - 5
5. இந்தியா - 5
6. இங்கிலாந்து - 4
7. நியூசிலாந்து - 4
8. தென்னாப்ரிக்கா - 4
9. ஜிம்பாபே - 3
10. மேற்கிந்திய தீவுகள் - 2
இந்தியா 5 முறை:
அதிக ஹாட்ரிக் வீழ்த்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5 முறை ஹாட்ரிக்- விக்கெட்ஸை பதிவு செய்துள்ளது. அதன்படி, சேத்தன் சர்மா இந்திய அணிக்காக முதன்முறையாக 1987ம் ஆண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இரண்டு முறை ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
இந்திய வீரர்களின் பட்டியல்:
1. சேத்தன் சர்மா Vs நியூசிலாந்து, 1987
2. கபில் தேவ் Vs இலங்கை, 1991
3. குல்தீப் யாதவ் Vs ஆஸ்திரேலியா, 2017
4. குல்தீப் யாதவ் Vs மேற்கிந்திய தீவுகள், 2019
5. முகமது ஷமி Vs ஆப்கானிஸ்தான், 2019
அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர்கள்:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில், இலங்கையை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா முதலிடம் பிடித்துள்லார். அதன்படி, மலிங்கா இதுவரை மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2007ம் ஆண்டு உலககோப்பை தொடரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில், மலிங்கா தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து, பாகிஸ்தானை சேர்ந்த வாசிம் அக்ரம், சக்லின் முஸ்தக், இலங்கையை சேர்ந்த ஜெமிந்தா வாஸ், நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் மற்றும் இந்திய அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 முறை ஹாட்ரிக் விக்கெட்ஸ் எடுத்துள்ளன.