Sachin on ODI Cricket: ”ஒருநாள் கிரிக்கெட் போரடிக்குது, இதையெல்லாம் மாத்துனாதான் சரியா வரும்” - சச்சின்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பேட்டி:
தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நவீன கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்களுக்கு எல்லாம் முடிந்து விடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விரிவான பதில்களையும் வழங்கியுள்ளார்.
”நாட்களை பார்க்காதீர்கள்”
அதன்படி “டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எத்தனை நாட்கள் நீடிக்kiRathu. ஐந்து நாட்கள் அல்லது வேறு எத்தனை நாட்களில் போட்டி முடிகிறது என்பதல்ல இங்கு விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது. அது பவுன்சர் டிராக், வேகமான டிராக், மெதுவான டிராக், டர்னிங் டிராக் மற்றும் ஸ்விங்கிங் டிராக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் தங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும் என கருதுவதை விட, அனைத்து சூழலுக்கும் தயார் ஆவதே சிறந்த முடிவாக இருக்கும். என்னை பொருத்தவரை எந்த மாதிரியான மைதானங்களில் விளையாடுகிறோம் என்பதே முக்கியம். அதுவே கிரிக்கெட்டின் இதயமும் கூட என சச்சின் கூறினார். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நம்பர் ஒன் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கும்போது போட்டிகள் 3 நாட்களில் முடிவடைவதில் எந்த பாதிப்பும் இல்லை.
”பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் வேண்டும்”
ஐ.சி.சி., எம்.சி.சி. உள்ளிட்ட கிரிக்கெட் சம்மேளனங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி நம்பர்-1 வடிவமாக தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்கின்றன. அதற்கு முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏதாவது இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இல்லாவிட்டால் எப்படி பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.
”சலிப்பை ஏற்படுத்தும் ஒருநாள் கிரிக்கெட்”
தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் ஒரு புதிய பந்தை பயன்படுத்துவதால், போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதையே நீக்கிவிட்டோம்.போட்டியில் 40வது ஓவரை வீசினலும், அந்த பந்திற்கு அது 20வது ஓவர் தான். ஆனால், பந்து 30வது ஓவரில் தான் ஸ்விங் ஆகவே தொடங்கும். ஆனால், இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை. இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.
சச்சின் பரிந்துரை:
50 ஓவர் போட்டியை தக்கவைத்துக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பனி காரணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். .
அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது, ஏனெனில் இரண்டு இன்னிங்ஸ் இடைவெளிகளுக்கு பதிலாக மூன்று இன்னிங்ஸ் இடைவெளிகள் இருக்கும்" என சச்சின் வலியுறுத்தியுள்ளார்.