(Source: Poll of Polls)
IND vs SL: மிகப்பெரிய ஏமாற்றம்.. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை! சோகத்தில் ரோஹித் ஷர்மா
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான 2வது போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்
இந்தியா - இலங்கை:
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடு வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. ரோஹித் ஷர்மா தலைமையிலான ஒரு நாள் அணி முதல் போட்டியை டிரா செய்தது. இச்சூழலில் இன்று (ஆகஸ்ட் 4) இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி.
அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 42.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இச்சூழலில் தான் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில், "இந்த தோல்வி நிச்சயம் மிகப்பெரிய ஏமாற்றம் தான். நம் முன் என்ன மாதிரியான பிட்ச் இருக்கிறதோ, அதற்கேற்ப தகவமைத்து கொண்டு விளையாட வேண்டும்.
மிடில் ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது எளிதல்ல:
இடது - வலது பேட்ஸ்மேன் கூட்டணி களத்தில் இருக்கும் போது, எளிதாக ஸ்ட்ரைக் மாற்ற முடியும். அதனால் தான் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் நடந்தது. நான் 64 ரன்கள் சேர்க்க முடிந்ததற்கு எனது பேட்டிங் ஸ்டைல் காரணம் என்று நினைக்கிறேன். நான் அப்படி பேட்டிங் செய்யும் போது, கொஞ்சம் ரிஸ்கும் இருக்கிறது. ஆனால் நான் நன்றாக பேட்டிங் செய்தால் போதாது. இந்திய அணி தோல்வியடைந்தால் நிச்சயம் ஏமாற்றம் தான்.
மிடில் ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது எளிதல்ல. அதன் காரணமாகவே பவர் பிளேவில் எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ, அதனை சேர்க்க முயற்சிக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று கூர்ந்து பார்க்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் மிடில் ஓவர்களில் எப்படி செயல்பட்டுள்ளோம் என்பது குறித்து பேசுவோம்" என்று கூறியுள்ளார் ரோஹித் ஷர்மா.