India vs Bangladesh: 1998-ல் மோசமான தோல்வி; 25 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் வங்கதேசம் - வெற்றியை வசமாக்குமா?
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது வங்கதேச அணி.
கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று (அக்டோபர் 19) வங்கதேச அணியுடன் விளையாடி வருகிறது.
இது உலகக் கோப்பை தொடரின் 17 வது லீக் போட்டி. அதன்படி இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 258 ரன்கள் இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.
25 ஆண்டுகளுக்கு பிறகு:
கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மண்ணில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. கடைசியாக, கடந்த 1998 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. அந்த போட்டியில், முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 36.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அன்றைய போட்டியில் மிகவும் மோசமாக விளையாடியது வங்கதேச அணி. 4 வீரர்கள் டக்- அவுட் ஆகி வெளியேறினர். மற்ற 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக அந்த அணியில் ஹசிபூல் ஹொசைன் மட்டுமே 21 ரன்கள் எடுத்து இருந்தார்.
இந்தியா வெற்றி:
எளிய இலக்குடன் களமிறங்கி இந்திய அணி 29.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதில் அதிகபட்சமாக இந்திய அணி வீரர் நவ்ஜோத் சித்து 41 ரன்கள் எடுத்தார். அதேபோல் சச்சின் டெண்டுல்கர் 33 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
வங்கதேசத்தை துவைத்த ரோகித்:
வங்கதேசத்திற்கு எதிரான கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. அதேபோல் இன்றைய போட்டியிலும் சதம் அடிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் ஹிட்மேட் ரோகித் சர்மா சதம் அடித்தால் ஹாட்ரிக் சதமாக இருக்கும்.
ஒருமுறை மட்டுமே இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்:
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மட்டும் தான் இந்தியாவை வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது. அதேநேரம் மற்ற போட்டிகளில் எல்லாம் இந்திய அணியின் கை தான் ஓங்கி இருக்கிறது. கடந்த மூன்று உலகக் கோப்பை தொடரிலும் வங்கதேச அணியை ஹாட்ரிக் முறையில் இந்தியா வீழ்த்தி இருக்கிறது.
முன்னதாக இன்று (அக்டோபர் 19 ) நடைபெற்று வரும் போட்டியில் 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வங்கதேச அணி 210 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு மோசமான தோல்வியை இந்திய மண்ணில் சந்தித்த வங்கதேச அணி இன்றைய போட்டியில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி ரசிகர்ளிடம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli: விராட் கோலி இன்று ஜொலித்தால் குவியும் சாதனைகள்.. சச்சின், ஜெயவர்த்தனேவை முந்த வாய்ப்பு!
மேலும் படிக்க: Virat Kohli: உலகக் கோப்பையில் விராட் கோலி பவுலிங்; உடனே வெளியேறிய ஹர்திக் பாண்டியா; என்ன ஆச்சு?