IND vs WI, 1st T20: வெஸ்ட் இண்டீஸை வாரி சுருட்ட காத்திருக்கும் இந்தியா.. முதல் டி20 போட்டியில் இன்று மோதல்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி தரோபாவில் இன்று நடக்கிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி தரோபாவில் இன்று நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், கடைசி 2 ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது.
அதன்படி முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆடுகளும் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் இந்த போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியின் இளம் வீரர்கள் களம் இறங்கி விளையாடுகிறார்கள். முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை முழுமையாக நிரூபிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம் டெஸ்ட், ஒருநாள் தொடரை இழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. அந்த அணி வீரர்கள் இதுபோன்ற குறைந்த ஓவர் கொண்ட போட்டியில் நன்றாக விளையாடுபவர்கள் என்பதால் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17 போட்டிகளில் இந்தியாவும், 7 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. இன்றைய ஆட்டம் நடக்கும் பிரையன் லாரா மைதானத்தில் தான் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா விளையாடி 351 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ், பொதிகை சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.