IND Vs NZ W: ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி - அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?
IND Vs NZ W World Cup: உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

IND Vs NZ W World Cup: உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்திய அணி அபார வெற்றி:
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்றின் நேற்றைய போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற எதிரணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினர். இறுதிகட்டத்தில் பட்டாசாய் வெடித்த ஜெமிமா, 76 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 340 ரன்களை குவித்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. மழையும் குறுக்கிட்டதால் போட்டி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இலக்கு 325 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ப்ரூக் ஹாலிடே, இஸ்ஸி கேஸ் மற்றும் அமிலியா கேர் ஆகியோர் அரைசதம் விளாசினாலும், 44 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஃபைனலி.. அரையிறுதியில் இந்தியா
உள்ளூரில் நடைபெறும் உலக்க கோப்பை என்பதால், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தனது முதல் ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். ஆனால், லீக் சுற்றிலேயே அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வி கண்டு, அரையிறுதிக்கு நுழையுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தான் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதின் மூலம், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் ரசிகர்களும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
அரையிறுதியில் இந்தியா யாரை எதிர்கொள்ளும்?
புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 11 புள்ளிகளுடனும், தென்னாப்ரிக்கா அணி 10 புள்ளிகளுடனும், இங்கிலாந்து அணி 9 புள்ளிகளுடனும் மற்றும் இந்திய அணி 6 புள்ளிகளுடனும் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 8 அணிகளுக்கும் மீதமுள்ள லீக் சுற்றில் தலா ஒரு போட்டி மட்டுமே உள்ளது. இந்திய அணி தனது கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றாலும் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து, முதலிடத்தில் இருக்கும் அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டி உள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் நாளை மோத உள்ளன. அந்த போட்டியின் முடிவிலேயே, இந்தியா அரையிறுதியில் யாரை எதிர்கொள்ள நேரிடும் என்பது உறுதி செய்யப்படும். தென்னாப்ரிக்கா அணி வெற்றியை பதிவு செய்தால், முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி நாளை தோற்று, நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து பிரமாண்ட வெற்றியை பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். ஆனால், தற்போதைய சூழலில் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இந்தியா மோதவே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவிற்கான அரையிறுதி போட்டி எப்போது?
இந்திய அணிக்கு நான்காவது இடம் உறுதி என்பதால், வரும் 29ம் தேதி கவுகாதியில் உள்ள பர்ஸபரா மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போடிட்யில் களமிறங்க உள்ளது. அதிலும், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஒரு தோல்வியை கூட கண்டிராத ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது. லீக் சுற்றில் கண்ட தோல்விக்கு பழி வாங்கி இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.




















