IND Vs ENG: முதல் சம்பவமே தரமா இருக்குமா? இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட், கில்லின் கேப்டன்சி ஈர்க்குமா?
IND Vs ENG Test Series: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஹெடிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

IND Vs ENG Test Series: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்க உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, முதல்போட்டி ஹெடிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். பல வருடங்களுக்குப் பிறகு கோலி மற்றும் ரோகித் ஆகியோரில் ஒருவர் கூட இல்லாமல், இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. புதியதாக பொறுப்பேற்றுள்ள கேப்டன் கில் தாக்கத்தை ஏற்படுட்த்துவாரா? என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய அணி எப்படி?
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே தற்போதைய சூழலில் ஓரளவிற்கு அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களாக உள்ளனர். கேப்டன் கில் உட்பட மற்ற அனைவருமே சராசரியாக 30 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். இதனால், இந்திய டெஸ்ட் அணி புதிய கட்டமைப்பிற்கு தயாராகி வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. இக்கட்டான சூழலில் அணிக்கு பங்களிப்பை அளித்து வந்த கோலி மற்றும் ரோகித்தின் இடத்தை நிரப்பப்போவது யார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. மறுபுறம் பந்துவீச்சில் சிராஜ் மட்டுமே சுமார் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்றவர்கள் பெரிய அனுபவம் இல்லாத வீரர்களாக தான் உள்ளனர். அஷ்வினி இடத்தை நிரப்பி, குல்தீப் விக்கெட் வேட்டை நடத்துவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சுப்மன் கில் உள்ளூர் டெஸ்டில் ஒருமுறை கூட அணியை வழிநடத்தாமல், நேரடியாக இங்கிலாந்து தொடரில் கேப்டனாக களமிறங்குவது அணியை வழிநடத்துவதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் பலவீனமான பவுலிங் யூனிட்:
இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரை தவிர்த்தால், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவருமே சேர்ந்து வெறும் 26 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.இது அவர்களது அனுபவமில்லாத பவுலிங் யூனிட்டை காட்டுகிறது. ஆனால், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிய அனுபவம் இருப்பது தங்களது சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கிறது. பேட்டிங்கில் ஒல்லி போப், ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானம் எப்படி?
ஆரம்பத்தில் க்ரீன் சீமராக தொடங்கினாலும் பின்னர் ஆடுகளம் ஃபிளாட்டாக மாறும் என்பதே ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் மைதனாத்தின் தன்மையாக உள்ளது. ஹெடிங்லியில் முதலில் பந்து வீசுவதுதான் சரியான தேர்வாக இருக்கும். முதலில் பந்து வீசும் அணிகள் இந்த மைதானத்தில் நடந்த கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன , மேலும் இங்கு கடைசி நான்கு நான்காவது இன்னிங்ஸ்கள் 322, 359, 296 மற்றும் 251 என்ற இலக்குகள் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளன.
பிளேயிங் லெவன்:
இந்தியா (உத்தேச அணி): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன்/சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர்/குல்தீப் யாதவ்/நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (C), ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஓல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (WK), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்




















