IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது.

IND vs ENG 2nd Test: சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.
இன்று 2வது டெஸ்ட்:
இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் சவால் மிகுந்ததாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த மைதானத்தில் இந்திய அணி 1967ம் ஆண்டு முதல் ஆடி வருகிறது.
அதாவது, கடந்த 58 ஆண்டுகாலத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 1 போட்டியில் கூட வெற்றி பெற்றதே இல்லை. 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியில் டிரா செய்துள்ளது.
தவறுகளைச் சரி செய்யுமா இந்தியா?
மிக மோசமான வரலாற்றை இந்த மைதானத்தில் வைத்துள்ள இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி கடும் சவாலை அளிக்கத் தயாராக உள்ளது. முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே 11 வீரர்களே இந்த போட்டியிலும் ஆடுவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் முதல் ஆட்டத்தில் பேட்டிங் பாராட்டும் வகையில் இருந்தது. இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன், கருண் நாயர் பேட்டிங்கில் சொதப்பினர். பின்வரிசை வீரர்கள் பேட்டிங்கில் பெரியளவில் பங்களிக்காததும் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கேட்ச்களை கோட்டைவிட்டதே முதல் போட்டியை இந்திய அணி தவறவிட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பேட்டிங் பலம்:
முதல் போட்டியில் செய்த தவறுகள் அனைத்தையும் சரி செய்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியை தங்கள் வசப்படுத்த முடியும். இல்லாவிட்டால் இந்த போட்டியையும் இந்திய அணி அவர்கள் கையில் கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
கடந்த போட்டியில் பேட்டிங்கில் அசத்திய ஜெய்ஸ்வால், சுப்மன்கில், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் இந்த போட்டியிலும் அதே பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக, இந்திய பேட்டிங்கிற்கு தூணாக நின்று கே.எல்.ராகுல் இருப்பது மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.
பலவீனமான பவுலிங்:
இந்திய அணியின் பந்துவீச்சு ஏற்கனவே பலவீனமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பும்ராவும் இல்லாத நிலையில், இந்திய அணி பந்துவீச்சு என்ன செய்யப்போகிறது? என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.
முகமது சிராஜ் இந்திய பந்துவீச்சு படையை வழிநடத்த வேண்டியது மிகவும் அவசியமாகி உள்ளது. அவருடன் பிரசித் கிருஷ்ணா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த போட்டியில் அர்ஷ்தீப்சிங் களமிறக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.
ப்ளேயிங் லெவன் எப்படி?
இந்த மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜடேஜாவிற்கு பக்கபலமாக குல்தீப் யாதவ் இந்த போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்திய ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. பேட்டிங் மிகவும் பலமாக உள்ள நிலையில், மைதானத்திற்கு ஏற்றவாறு சிறந்த பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வது சுப்மன்கில்லிற்கும், கம்பீருக்கும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் அந்த அணி பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக உள்ளது. இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்:
பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ்,ப்ரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயிப் பஷீர் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களில் கிறிஸ் வோக்ஸ் வரை அவர்கள் அணியில் பேட்ஸ்மேன்கள்.
மிரட்டும் இங்கிலாந்து:
முதல் டெஸ்டில் சொதப்பிய ஒல்லி போப் தவிர மற்ற அனைவரும் முதல் டெஸ்டில் பேட்டிங்கில் அசத்தினர். பந்துவீச்சிலும் கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், டங் அசத்தி வருகின்றனர். இவர்களது பந்துவீச்சை சமாளிக்க வேண்டியது இந்திய அணிக்கு மிக மிக முக்கியம்.
போட்டி எப்போது?
இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் அணியாக இந்திய அணி சிறப்பாக ஆடினால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். இந்த போட்டியைத் தொலைக்காட்சியில் சோனி லைவ்விலும், ஓடிடியில் ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.



















