IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 304 ரன்களை குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதியிலே நின்ற போட்டி:
இந்த நிலையில், இந்திய அணி இலக்கை நோக்கி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தபோது திடீரனெ மைதானத்தில் ஒருபுறத்தில் இருந்த மின் விளக்குகள் அணைந்தது. இதனால், ஒரு புறத்தில் மட்டும் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டது. இதனால், ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
ரோகித் சர்மா 18 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 29 ரன்களுடனும், கில் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 6.1 ஓவர்களில் 48 ரன்களுடன் ஆடி வருகிறது. போட்டி வெளிச்சம் இல்லாத காரணத்தால் பாதியிலே தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் காத்திருப்பு:
இதனால், போட்டி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருப்புடன் அமர்ந்துள்ளனர். பொதுவாக, இந்தியாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் எந்தவித தொழில்நுட்ப கோளாறுக்கான தடங்கலும் இல்லாமல் நடத்தப்படும்.
இந்த முறை துரதிஷ்டவசமாக போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அதை சரி செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
305 ரன்கள் டார்கெட்:
முன்னதாக, இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய டக்கெட் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து வந்த ஜோ ரூட் 72 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி கட்டத்தில் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
இந்திய அணிக்காக ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, ராணா, பாண்ட்யா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றும். இன்னும் சில தினங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

