IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் - ஜடேஜா... 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி.

இந்தியா - இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இதில் 39 பந்துகள் களத்தில் நின்ற பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் ஜாக் கிராவ்லி நிதானமாக விளையாடினார். அப்போது களமிறங்கிய ஒல்லி போப் 11 பந்துகள் நின்று 1 ரன்னில் ஜடேஜா சுழலில் நடையைக்கட்டினார். 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களுடன் இங்கிலாந்து அணி விளையாடியது. இதனிடையே, நிதானமாக விளையாடிய ஜாக் கிராவ்லி 20 ரன்களில் அஸ்வின் சுழலில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.
மாயாஜால சுழல்:
பின்னர் வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடினார்கள். அப்போது ஜோ ரூட் ஜடேஜா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார், அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 58 பந்துகள் களத்தில் நின்று 37 ரன்களில் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டானார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடினார் . 88 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 70 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் 64.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து சுழலில் மாயாஜாலம் செய்தனர், அதன்படி, 18 ஓவர்கள் வீசிய ஜடேஜா 4 ஓவர்களை மெய்டன் செய்து 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், அஸ்வின் 21 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டன் செய்து 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். மேலும் 13 ஓவர்கள் வீசிய அக்ஸர் படேல் 1 ஓவர் மெய்டன் செய்து 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் ஜஸ்ப்ரித் பும்ராவும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்க: IND vs ENG: சுழல் தாக்குதல் நடத்தும் இந்தியா! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இங்கிலாந்து!
மேலும் படிக்க: Ind vs Eng 1st Test: விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டது ஏன் தெரியுமா? ரோஹித் சர்மா விளக்கம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

