IND vs BAN 1st Test: கடைசி நேரத்தில் 400 ரன்களை கடக்க உதவிய அஷ்வின்... 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய 404 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் உள்ள தேசிய மைதானத்தில் டிசம்பர் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 41 ரன்களாக இருந்தபோது, சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து, அணியின் ஸ்கோர் 45 ரன்களாக இருந்தபோது கே.எல். ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அணியின் ஸ்கோர் 48 ரன்களாக இருந்த போது விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்த சரிவில் இருந்து மீளுமா என நினைத்துக் கொண்டு இருக்கையில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா கூட்டணி அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டது. அதன் பின்னர், அணியின் ஸ்கோர் 112 ரன்களாக இருந்தபோது அதிரடியாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 45 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், புஜாராவுடன் கைகோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர்கள் கூட்டணி தொடர்ந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றது. இதன்பின்னர், அணியின் ஸ்கோர் 261 ரன்களாக இருந்த போது 203 பந்தில் 90 ரன்கள் குவித்து சதத்தினை நெருங்கிக்கொண்டு இருந்த புஜாரா எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
அஷ்வின் அரைசதம்:
இதன் பின்னர் களமிறங்கிய அக்ஷ்ர் பட்டேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்தநிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அக்சார் பட்டேல் 14 ரன்களில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த அஷ்வின் - குல்தீப் ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர் பந்துகளை பதம் பார்க்க தொடங்கினர். இருவரும் இணைந்து 92 ரன்கள் சேர்க்க, நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்த அஷ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
A gallant effort from @ashwinravi99 and @imkuldeep18 helps #TeamIndia breach the 400-run mark. Ashwin departs after an excellent half-century and Kuldeep made a vital 40.
— BCCI (@BCCI) December 15, 2022
Live - https://t.co/CVZ44NpS5m #BANvIND pic.twitter.com/Z2TcZ0AhOv
தொடர்ச்சியாக, குல்தீப் யாதவ் 40 ரன்களிலும், உமேஷ் யாதவ் 2 சிக்ஸர்கள் அடித்து 15 ரன்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.