IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்பை 1 ரன்னில் நழுவ விட்டார் ஸ்டீவ் ஸ்மித்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்று முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
1 ரன்னில் கோட்டைவிட்ட ஸ்மித்:
162 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களுடன் ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகிய ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னில் அவுட்டானதன் மூலமாக மிகப்பெரிய சாதனை ஒன்றைத் தவறவிட்டுள்ளார்.
அதாவது, ஸ்டீவ் ஸ்மித் மேலும் 1 ரன் அடித்திருந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். ஆனால், அவருக்கு இந்த சாதனை கை நழுவிப்போனது. ஆஸ்திரேலியாவின் அடுத்த டெஸ்ட் தொடரிலே ஸ்டீவ் ஸ்மித் அந்த சாதனையைப் படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தன்னுடைய அடுத்த டெஸ்ட் தொடரை இலங்கைக்கு எதிராக ஆட உள்ளது.
10 ஆயிரம் ரன்கள்:
35 வயதான ஸ்டீவ் ஸ்மித் 114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 204 இன்னிங்சில் பேட் செய்து 9 ஆயிரத்து 999 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 34 சதங்கள், 4 இரட்டை சதங்கள் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 14 நபர்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
சச்சின் முதலிடம்:
ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். ஒட்டுமொத்த அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை 15 ஆயிரத்து 921 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் யாரும் நெருங்க முடியாத இடத்தில் வைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் ஜோ ரூட் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆவார். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்னில் 10 ஆயிரம் ரன்களைத் தவறவிட்டது அவரது ரசிகர்களுக்கு மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எட்டுவது என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. மிகவும் கடினமான போட்டியான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஸ்டீவ் ஸ்மித் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடர்ன் கிரிக்கெட்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களாக ஸ்மித், வில்லியம்சன், ஜாே ரூட் மற்றும் விராட் கோலி திகழ்கின்றனர்.