ICC ODI Team Of The Year: "ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லிடா" ஐசிசியின் கனவு அணியின் கேப்டன் யார் தெரியுமா?
ஐசிசி தங்கள் 2023 ஆம் ஆண்டின் கனவு ஒரு நாள் அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக இந்திய கேப்டன் ரோகித்சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி ஒரு நாள் போட்டிகள்:
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் முக்கியமான ஒரு ஆண்டாக பார்க்கப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்றால் 2023 ஆம் ஆண்டுதான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தொடரானது இந்தியாவில் நடைபெற்றது.
இதில், ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், அதேநேரம் இந்த தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி அசத்தியது. அந்த தொடரில் மட்டும் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றதே அதற்கு சான்று.
கேப்டனான ரோகித் சர்மா:
இந்நிலையில் தான் ஐசிசி 2023 காலாண்டர் வருடத்தின் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து தங்களது கனவு அணியை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவையே இந்த கனவு அணியின் கேப்டனாகவும் ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.
அதேபோல், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன்கில்லும் இடம் பிடித்துள்ளார். இதற்கான முக்கியகாரணம் சுப்மன்கில் கடந்த ஆண்டு மட்டும் 1584 ரன்களை குவித்தது தான். மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் பிடித்திருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரன் மிஷின் விராட் கோலிக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. இவர் 2023 ஆம் ஆண்டில் 1,377 ரன்கள் குவித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணி வீரர் டார்ல் மிட்செல் மற்றும் ஆறாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசின் இருக்கிறார். அவரை ஐசிசி விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்திருக்கிறது.
அதேபோல், ஏழாவது இடத்தில் தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் மற்றும் எட்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்பதாவது வது இடத்தில் இந்திய பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் பத்தாவது இடத்தில் குல்தீப் யாதவும் பதினொன்றாவது இடத்தில் முகமது ஷமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐசிசி கனவு ஒருநாள் அணி வீரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு வீரர்கள் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG: ஷார்ட் பந்தில் இரையாகும் ஷ்ரேயாஸ் ஐயர்! இங்கிலாந்துக்கு எதிராக சரி செய்வாரா?
மேலும் படிக்க: ENG vs IND: இங்கிலாந்துக்கு எதிரான கோலி இல்லாத இந்திய அணி.. மாற்று வீரராக புஜாரா, ரஹானே திரும்புவது கடினம்!