IND vs ENG: ஷார்ட் பந்தில் இரையாகும் ஷ்ரேயாஸ் ஐயர்! இங்கிலாந்துக்கு எதிராக சரி செய்வாரா?
ஷ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய டெஸ்ட் பார்மேட்டில் பேட்டிங் சராசரியை பார்க்கும்போது இந்திய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு சற்று முன்பு விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து போன்ற வலுவான டெஸ்ட் அணிக்கு எதிராக இந்திய அணிக்கு விராட் கோலி சேவை க்ட்டாய தேவையாக உள்ளது. இப்போது கோலி வெளியேறியதால் மிடில் ஆர்டரில் விளையாடும் 11-ல் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயரின் சமீபத்திய டெஸ்ட் பார்மேட்டில் பேட்டிங் சராசரியை பார்க்கும்போது இந்திய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பல்:
கடந்த ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 8 இன்னிங்ஸ்களில் 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரால் ஒருமுறை கூட 50 ரன்களை எட்ட முடியவில்லை. இங்கு ஷ்ரேயாஸின் பேட்டிங் சராசரி 11.85 ஆகவே உள்ளது.
இப்படியான மோசமான பேட்டிங் சராசரி இருந்தபோதிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட்க்கான இந்தியா அணியில் அவரது தேர்வு ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது. 2023 உலகக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயரின் வலுவான பேட்டிங் திறன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் அங்கேயும் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் செயல்திறன் சிறப்பாக இல்லை.
ஷார்ட் பால்தான் பெரிய பிரச்சனை:
ஷ்ரேயாஸ் ஐயரின் மிகப்பெரிய பலவீனம் ஷார்ட் பால்தான். எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் அவருக்கு ஷார்ட் பந்துகளை வீசி, அவரது விக்கெட்டுகளை எடுத்து விடுகின்றனர். இந்த பலவீனத்தை இதுவரை அவரால் சரி செய்ய முடியவில்லை. தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த பலவீனம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
ஷார்ட் பந்துகளில் விக்கெட்டுகளை இழக்கும் பழக்கத்தால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனை தொடர்ந்து சரிந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான டெஸ்டில் அவரது பேட்டிங் சராசரி வெறும் 28.11 ஆக குறைந்துள்ளது. இது மிகவும் மோசமான பேட்டிங் சராசரியாகும். அப்படிப்பட்ட நிலையில், தற்போது விராட் கோலி அணியில் இருந்து வெளியேறி, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் பிளேயிங்-11ல் இடம் பெறுவது உறுதியானால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் தனது பலவீனத்தை சரிசெய்ய வேண்டும்.
ஷ்ரேயாஸ் ஐயரின் ப்ளஸ் பாயின்ட் என்ன?
ஷ்ரேயாஸ் ஐயர் குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இவர் இந்திய மைதானங்களில் அதிக ரன்களை அடிக்கும் திறன் கொண்டவர். அதிலும், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது சாதனை சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் சுழலுக்கு உகந்த ஆடுகளங்கள் மட்டுமே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழலுக்கு உகந்த ஆடுகளங்களில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக இருக்கலாம். இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர்களின் ஷார்ட் பந்துகளுக்கு முன்னால் ஷ்ரேயாஸ் ஐயர் சற்று எச்சரிக்கையாக இருந்து தனது விக்கெட்டை பாதுகாத்து இந்திய அணிக்காக சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும்.