Gary Ballance : ஜிம்பாப்வே அணியில் முன்னாள் இங்கிலாந்து வீரர்… இரண்டு நாடுகளுக்காக டெஸ்ட் விளையாடிய 16-வது வீரர் இவர்தான்..
33 வயதான அவர் இரண்டு நாடுகளுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய 16வது கிரிக்கெட் வீரராகவும், இங்கிலாந்துக்காக 10 ஆவது வீரராகவும், ஜான் ட்ரைகோஸுக்குப் பிறகு அதைச் செய்த இரண்டாவது வீரராகவும் ஆனார்.
முன்னாள் இங்கிலாந்து வீரர் கேரி பேலன்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக அவர் பிறந்த நாடான ஜிம்பாப்வேவிற்காக விளையாடுவதற்காக இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இரு நாடுகளுக்காக விளையாடிய வீரர்
2017 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத பேலன்ஸ், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் அவருக்கு வயது குறைவுதான் என்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட முடிவு செய்தார். புலவாயோவில் நடந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை ஜிம்பாப்வே எதிர்கொண்ட நிலையில், ஜிம்பாப்வே அணியில் இடம்பெற்று இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு முன், அயர்லாந்துக்கு எதிரான ஆண்டின் தொடக்கத்தில் ஒரு டி20ஐ மற்றும் ஓரிரு ஒருநாள் போட்டிகளில் பேலன்ஸ் விளையாடினார். கிரேக் எர்வின் தலைமையிலான அணியில் பேலன்ஸ் இடம்பெற்றார். மேலும் 33 வயதான அவர் இரண்டு நாடுகளுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய 16வது கிரிக்கெட் வீரராகவும், இங்கிலாந்துக்காக 10 ஆவது வீரராகவும், ஜான் ட்ரைகோஸுக்குப் பிறகு அதைச் செய்த இரண்டாவது வீரராகவும் ஆனார். இந்த 16 கிரிக்கெட் வீரர்களில் நான்கு பேர் இந்தியா மற்றும் வேறு நாட்டிற்காக விளையாடியவர்கள் என்பது தான் ஸ்வாரஸ்யமான விஷயம். அவர்களில் மூன்று பேர் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்காக விளையாடினர், ஒருவர் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்காக விளையாடினார்.
இப்திகார் அலி கான் பட்டோடி
பொதுவாக நவாப் பட்டோடி சீனியர் என்று அழைக்கப்படும் இவர், 1932 மற்றும் 1934 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்காக விளையாடியவர். பட்டோடி சீனியர் 1946 ஆம் ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு தலைமை தாங்கினார். அதற்கு முன்பு இங்கிலாந்துக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தார்.
குல் முகமது
முன்னாள் கிரிக்கெட் வீரரும் நிர்வாகியுமான குல் முகமது, பாகிஸ்தான் குடியுரிமை பெறுவதற்கு முன்பு 1946 முதல் 1952 வரை இந்தியாவுக்காக விளையாடினார். முகமது தனது வாழ்க்கையில் 9 டெஸ்ட் போட்டிகளில் 8 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார், அதே நேரத்தில் பாகிஸ்தானுக்காக 1955 இல் இறுதிப் போட்டியில் விளையாடினார்.
அப்துல் ஹபீஸ் கர்தார்
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தையாகக் கருதப்படும் அப்துல் ஹபீஸ் கர்தார், பிரிவினைக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவுக்காக தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். இடது கை பேட்டர் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்து வீச்சாளர், கர்தார் 1946 இல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு, அவர் அந்த அணியையும் வழிநடத்தினார் மற்றும் டெஸ்டில் மேலும் 23 ஆட்டங்களில் விளையாடினார்.
அமீர் எலாஹி
மீடியம் பேசரான அமீர் எலாஹி, தனது வாழ்க்கையில் பின்னர் லெக்-ஸ்பின்னரானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பவுலிங் ஸ்டைலை மட்டும் மாற்றவில்லை நாட்டையும் மாற்றினார். 1947 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக தனது ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பிரிவினைக்குப் பிறகு, எலாஹி பாகிஸ்தானுக்காக ஐந்து போட்டிகளில் விளையாடினார்.
இரண்டு நாடுகளுக்காக (ஆண்கள்) டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்:
1. பில்லி மிட்விண்டர் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து)
2. வில்லியம் லாயிட் முர்டோக் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து)
3. ஜேஜே பெர்ரிஸ் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து)
4. சமி வூட்ஸ் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து)
5. பிராங்க் ஹெர்ன் (இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா)
6. ஆல்பர்ட் ட்ராட் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து)
7. பிராங்க் மிட்செல் (இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா)
8. இப்திகார் அலி கான் பட்டோடி (இங்கிலாந்து, இந்தியா)
9. குல் முகமது (இந்தியா, பாகிஸ்தான்)
10 அப்துல் ஹபீஸ் கர்தார் (இந்தியா, பாகிஸ்தான்)
11. அமீர் எலாஹி (இந்தியா, பாகிஸ்தான்)
12. சமி கில்லன் (வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து)
13. ஜான் ட்ரைகோஸ் (தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே)
14. கெப்லர் வெசல்ஸ் (ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா)
15. பாய்ட் ராங்கின் (இங்கிலாந்து, அயர்லாந்து)
16. கேரி பேலன்ஸ் (இங்கிலாந்து, ஜிம்பாப்வே)