AUSW vs PAKW: தனி ஒருத்தி... பெத்மூனியிடம் தோற்றுப்போன பாகிஸ்தான்.. ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் பெத் மூனியின் அபார பேட்டிங்கால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று நடந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது.
பவுலிங்கில் மிரட்டிய பாகிஸ்தான்:
கொழும்பில் நடந்த இந்த போட்டியில் மைதானம் பந்துவீச்சிற்கு மிகவும் ஒத்துழைத்ததால் ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்கத் தடுமாறியது. கேப்டன் ஹேலி 20 ரன்களில் அவுட்டாக சில நிமிடங்களில் லிட்ச்ஃபீல்ட் 10 ரன்களில் அவுட்டானார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்லீஸ் பெர்ரி களமிறங்கினார். அவர் 5 ரன்களில் அவுட்டாக, மற்றொரு அதிரடி வீராங்கனை சதர்லெண்ட் 1 ரன்னில் அவுட்டானார். 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஒரு முனையில் பெத் மூனி நிதானம் காட்டினார்.
தனி ஒருத்தி:
சுழல், வேகம் என பாகிஸ்தான் வீராங்கனைகள் மாற்றி, மாற்றி தாக்குதல் நடத்தினர். மற்றொரு அதிரடி வீராங்கனை 1 ரன்னில் அவுட்டாக தாஹிலா மெக்ராத் 5 ரன்னில் அவுட்டானார். 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
கிம் கார்த்தை மறுமுனையில் வைத்துக்கொண்டு பெத் மூனி நிதானமாக ஆடினார். மூனி ஓரிரு ரன்களாகவும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாச பாகிஸ்தான் 100 ரன்களை கடந்தது. மிகவும் நிதானமாக ஆடிய கிம் கார்த் 47 பந்துகளில் 11 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்து ஆலனா கிங் களமிறங்கினார்.
பெத்மூனி சதம்:
இவர் பெத் மூனிக்கு ஒத்துழைப்பு அளிக்க பெத்மூனி - இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 115 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பியது. ஆலனா கிங் பேட்டிங்கில் அதிரடி ஏற்றி அவ்வப்போது சிக்ஸர் விளாச மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். அரைசதத்திற்கு பிறகு ரன்வேட்டையை பெத் மூனி இன்னும் துரிதப்படுத்தினார்.
இதனால், 150 ரன்களை கடந்தது ஆஸ்திரேலியா. டயானா பைக், கேப்டன் சனா, இக்பால், ஷமீம், நஷ்ரா சந்து அடுத்துடுத்து பந்துவீச்சு தாக்குதல் நடத்தியும் இந்த ஜோடியை பிரிக்க இயலவில்லை. சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை 200 ரன்களை கடக்கவைத்தது. நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆடிய பெத்மூனி சதம் விளாசினார். கடைசி பந்தில் அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய கிங் அவுட்டானார். அவர் 49 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தடுமாறிய பாகிஸ்தான்:
50 ஓவர்கள் முடிவில் 221 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. 222 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி ஆட்டம் காண வைத்தது. தொடக்க வீராங்கனை ஷமாஸ் 5 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீராங்கனை முனிபா அலி 3 ரன்னில் அவுட்டானார். சித்ரா அமீன் மடடும் தனி ஆளாக நிதானம் காட்ட விக்கெட் கீப்பர் சித்ரா நவாஸ் 5 ரன்னில் அவுட்டாக, நடாலியா 1 ரன்னில் அவுட்டானார்.
சித்ரா அமின் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி பாகிஸ்தானுக்காக ஒரு பக்கம் ரன்களை சேர்க்க பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பாக ஆடிய சித்ரா அமீன் 52 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் சனா 11 ரன்னில் அவுட்டாக ரமீன் ஷமீம் களத்தில் நங்கூரம் போல நின்றார். ஆனால் அணிக்கு அதனால் எந்த பலனும் இல்லாமல் போனது.
ஆஸ்திரேலியா அபார வெற்றி:
பந்துவீச்சாளர்களான ரமீனா - நஷ்ரா சந்து இருவரும் நீண்ட நேரம் களத்தில் நின்றாலும் அவர்களால் ரன் எடுக்க முடியவில்லை. ஆனாலும், பாகிஸ்தானை 100 ரன்களை கடக்க வைத்தது. கடைசியில் 114 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டாகியது. இதனால், 107 ரன்களுக்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு பெத்மூனியே காரணம் ஆகும். 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை 221 ரன்கள் எடுக்க வைத்தது அவரின் சிறப்பான ஆட்டமே ஆகும். இதுபோன்ற ஒரு ஆட்டத்தை கடந்த ஒருநாள் ஆடவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக கிளென் மேக்ஸ்வெல் ஆடி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருப்பார். அந்த போட்டியில் மேக்ஸ்வெல் தனி ஆளாக நெருக்கடியான சூழலில் இரட்டை சதம் விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்திருப்பார். அப்படி ஒரு ஆட்டத்தை பெத்மூனி ஆடியுள்ளார்.




















