AUS Vs ENG World Cup 2023: டாப்-4ஐ உறுதி செய்யுமா ஆஸ்திரேலியா? நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்துமா?
Aus Vs ENG World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
AUS Vs ENG World Cup 2023: அகமதாபாத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 36வது லீக் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டாப் 4ஐ உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 34 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மல்லுக் கட்டி வருகின்றன. இந்நிலையில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி,பிற்பகல் நடைபெறும் போட்டியில், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, நான்காவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி வெற்றியை தொடரும் நொக்கில் இன்று களமிறங்குகிறது. அதேநேரம் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பலம் & பலவீனங்கள்:
ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் ஆகியோர் அசத்தலான ஃபார்மில் உள்ளன. பந்துவீச்சில் மட்டும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது. மறுமுனையில் இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தாலும், களத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் தவ்த்து வருகின்றனர். மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்ற் பெற்றாலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவே.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 155 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 87 முறையும், இங்கிலாந்து அணி 63 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் பேட்ஸ்மேன்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இன்றைய போட்டியிலும் அதிகப்படியான ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்கவே விரும்பும்.
உத்தேச அணி விவரங்கள்:
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட்