(Source: ECI/ABP News/ABP Majha)
Ashwin Ravichandran : இந்தியாவிலேயே முதல் வீரர்...வரலாறு படைத்த தமிழன்...வார்னே வரிசையில் அஸ்வின்...!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு வரை 2 வீரர்கள் மட்டுமே 3 ஆயிரம் ரன்களையும், 450 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடரில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது சுழலை எதிர்கொள்ளவே ஆஸ்திரேலிய வீரர்கள் இவரைப் போலவே பந்துவீசும் வீரரை கொண்டு சிறப்பு பயிற்சி மேற்கொண்டனர்.
அஸ்வின் சுழல் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த ஆல்ரவுண்டராகவும் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களையும் விளாசியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியினரை தனது சுழற்பந்துவீச்சால் மிரட்டி வரும் அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 449 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்று நாக்பூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருப்பதால் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு வரை 2 வீரர்கள் மட்டுமே 3 ஆயிரம் ரன்களையும், 450 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். அந்த பட்டியலில் அஸ்வினும் மூன்றாவது வீரராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு, புகழ்பெற்ற சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே 3000த்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
இங்கிலாந்தின் பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் ப்ராட் 566 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார். அஸ்வின் இந்த சாதனையை படைத்ததன் மூலம் இந்தியாவில் இருந்து இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
37 வயதான அஸ்வின் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3043 ரன்களை எடுத்துள்ளார். அதில் 5 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அஸ்வின் ஒருநாள் போட்டியில் 113 போட்டிகளில் ஆடி 707 ரன்களும், 151 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
65 டி20 போட்டிகளில் ஆடி 184 ரன்களும், 72 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 184 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 157 விக்கெட்டுகளையும், 647 ரன்களும் எடுத்துள்ளார்.
Alex Carey becomes R Ashwin's 450th Test victim 👏#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/rzMJy0hUFm pic.twitter.com/9g6luAiqWt
— ICC (@ICC) February 9, 2023
பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆகி உள்ளது. 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது ஆஸ்திரேலியா. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுசானே அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்திருந்தார். தற்போது, இந்தியா அணி ஆடி வருகிறது. 2 ஓவர்கள் முடிவில் 15 ரன்களை எடுத்துள்ளது இந்தியா.