(Source: ECI/ABP News/ABP Majha)
Ashes Series 2023: ஆஷஸ் தொடரின் முதல் போட்டி.. காத்திருந்து இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி..!
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி கடந்த ஜூன் 16 ஆம் தேதி தொடங்கியது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணியில் ஜோ ரூட் 118 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி நிதானமாக விளையாடியது.
அந்த அணியில் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 141 ரன்கள் விளாச, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. அந்த அணியில் ஜோ ரூட், ஹேரி ப்ரூக் தலா 46 ரன்களும், ஒல்லி ராபின்சன் 27 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களம் கண்டது.நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸி., அணியின் மீதமுள்ள விக்கெட்டுகளை கைப்பற்ற இங்கிலாந்து அணியும் முழு மூச்சாக களம் கண்டது.
ஆனால் போட்டி நடைபெறும் இடத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தாமதாமாக தொடங்கியது. தொடர்ந்து விளையாடி ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா மீண்டும் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 44 , கேமரூன் க்ரீன் 28, ஸ்காட் போலண்ட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் தலா 20 ரன்கள் எடுத்தனர். 27 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி லண்டன் லார்ட்ஸில் வரும் ஜூன் 28 ஆம் தேதி தொடங்குகிறது.