Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை - வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் ஓபன் டாக்
Akash Deep: இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்தது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி அதாவது, வியாழக்கிழமை ராஜ் கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகளுக்கு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. அகாஷ் தீப் முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளது என்னவென்றால், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். அணிக்காக விளையாடி தேர்வர்களின் முடிவு சரியானது என உணரவைக்கும் வகையில், அதை நியாயப்படுத்துவது என் பொறுப்பு. டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இந்தியாவுக்காக என்னால் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவுக்காக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவது, ஒரு வீரராக உங்கள் திறமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது மற்றும் களத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கும். ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக கடந்த சில சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்” என்று கூறினார்.
மேலும், “இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா `ஏ' அணிக்காக நான் சிறப்பாக பந்து வீசினேன். இந்திய அணிக்கு விளையாட அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். எனவே, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாக இல்லை. பெங்கால் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவேண்டும் என்றால் நீங்கள் கடினமாக உழைத்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். எனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் எனக்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,'' என்றும் ஆகாஷ் தீப் கூறினார்.
ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிந்ததும், பெங்கால் அணியின் பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா, பவுண்டரி லைன் வழியாக சாதாரணமாக நடந்து சென்று, எல்லைக் கோடு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆகாஷ் தீப்பிற்கு செய்தியை தெரிவித்தார். அப்போது ஆகாஷ் தீப் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
ஆகாஷ் தீப், இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் தீப் இந்திய அணி ராஜ்கோட்டில் பயிற்சியை தொடங்கும்போது வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.