Santhi Soundararajan: தடகள பயிற்சியாளர் சாந்திக்கு மீண்டும் நெருக்கடி..! சர்ச்சையில் விசாரணைக்குழு - வலுக்கும் ஆதரவு குரல்!
முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி சௌந்திரராஜனிடம் பாலின சான்றிதழ் கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தகுறிச்சி சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனை சாந்தி சௌந்திரராஜன். இவருக்கு 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணி வழங்கப்பட்டது. அந்தப் பணியில் இருக்கும் சகப் பயிற்சியாளர்கள் இவரை சாதி ரீதியிலும் பாலின ரீதியிலும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக அவர் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். இதை காவல் ஆணையர் ஹரீஸ் குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரணையின் போது அவர் சாந்தி சௌந்திரராஜன் இடம் பாலின சான்றிதழை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் பலரும் சாந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
சாந்தி சௌந்திரராஜன் கடந்து வந்த பாதை:
சாந்தி சௌந்திரராஜன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தாய், தந்தை இருவருமே செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இவருடன் சேர்ந்து நான்கு பேர் உடன் பிறந்தனர். இதனால் இவர்களுடைய குடும்பம் பெறும் வறுமையில் சிக்கி தவித்தது. குடும்ப வறுமை காரணமாக பல நாட்கள் இவர்களால் 3 வேளை உணவு சாப்பிடமுடியாமல் போனது. இந்த இக்கட்டான சூழலிலும் சாந்தி தனக்கு மிகவும் பிடித்த ஓட்டப்பந்தைய விளையாட்டை விடாமல் பயிற்சி செய்தார். இவருடைய தாத்தா ஒரு தடகள வீரர் என்பதால் இவருக்கு அவர் பயிற்சியளித்துள்ளார்.
பள்ளிப்பருவத்தில் இவருடைய திறமையை பார்த்த ஒரு பள்ளி ஆசிரியர் தம்முடை அரசுப் பள்ளியில் சேர சாந்தியை அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாந்தியும் அந்த அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டது. அப்போது தான் முதல் முறையாக தினமும் மூன்று வேளை இவர் உணவு உண்டார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவரது தாய் கொடுத்த ஊக்கத்தினால் இவர் ஓட்டப்பந்தையத்தில் சிறந்து விளங்க ஆரம்பித்தார்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் 800 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் பிரிவில் இவர் தங்கம் வென்று அசத்தினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த தடகள வீராங்கனை என்ற பட்டத்தை இவர் வென்றார். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 11 சர்வதேச பதக்கங்களை வென்ற இவருக்கு 2006ஆம் ஆண்டு பெரிய அதிர்ச்சியை அளித்தது. அந்தாண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் இவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்குள் இவருக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி செய்தி வந்தது.அதாவது அந்தப் போட்டிகளுக்கு பிறகு இவருக்கே தெரிவிக்காமல் பாலின சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சாந்தி சௌந்தரராஜன் தோல்வி அடைந்தார்.
இதனால் இவருடைய பதக்கம் பறிபோனது மட்டுமில்லாமல் அவரால் தடகள போட்டிகளில் கலந்து கொள்ளவும் முடியாத நிலை ஏற்பட்டது. அதுவரை தடகள விளையாட்டை மட்டும் நம்பி இருந்த சாந்தி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். அவருக்கு இந்திய தடகள சங்கமும் சரியான உதவியை வழங்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது அவருடைய நண்பர் காப்பாற்றியதால் உயிர் பிழைத்துள்ளார். இதன்பின்னர் தனக்கு உரிய வேலை வேண்டும் என்று பல முறை போராடி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். கடைசியாக 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இவருக்கு தமிழ்நாடு அரசு பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இவருக்கு தடகள பயிற்சியாளர் பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்