AFC Asia Cup: ஒரே அணியில் 12 பேருக்கு கொரோனா... இந்திய மகளிர் கால்பந்து அணியை துரத்தும் சோகம்..
இத்தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடப்பதால், சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகளை கொரோனா தாக்கி இருப்பது கால்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.எஃப்.சி பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, சீனா, சீனா தைபே, இரான் அணிகள் இடம் பெற்றன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, நவி மும்பை, புனே என மூன்று மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியில் 12 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சீன தைபே அணியுடனான போட்டி ரத்து செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட வீராங்கனைகளை தவிர்த்து பேக்-அப் வீராங்கனைகளை போட்டியில் களமிறக்கலாம். ஆனால், போட்டியை எதிர்கொள்ள போதுமான வீராங்கனைகள் இல்லாததாலும், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளை தனிமைப்படுத்த வேண்டியுள்ளதாலும் ஏ.எஃப்.சி பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி உள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அனைத்திந்திய கால்பந்து அமைப்பின் தலைவர் ப்ரவுல் பட்டேல். “பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டபோதும் இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது துர்திஷ்டவசமானது. வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி, ஏஎஃப் சி தொடரில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. விரைவில் வீராங்கனைகள் குணமடைவார்கள்” என தெரிவித்துள்ளார். எனினும், கொரோனா பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் பெயர், விவரத்தை இந்திய கால்பந்து அமைப்பு இன்னும் வெளியிடவில்லை.
🚨OFFICIAL🚨
— #WAC2022 (@afcasiancup) January 24, 2022
🇮🇳 India have withdrawn from the #WAC2022. All their matches are now cancelled and considered null and void!https://t.co/sEBQ6hQ5P2
ஏ.எஃப்.சி பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம் பெற்றனர். சந்தியா, மாரியம்மாள், செளமியா, இந்துமதி, கார்த்திகா என தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர். 18 ஆண்டுகளுக்கு முன், இந்திய மகளிர் அணி ஏ.எஃப்.சி தொடரில் களமிறங்கியபோது, ஒரு தமிழக வீராங்கனை கூட அணியில் இடம் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஐவர் தேர்வு செய்யப்படிருந்த நிலையில் இந்தியா அணி வெளியேறி இருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இத்தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடப்பதால், சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகளை கொரோனா தாக்கி இருப்பது கால்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்