Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி?
வைகுண்ட ஏகாதசிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிறது? என்ற வரலாற்றை கீழே காணலாம்.
பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக மார்கழி மாதம் திகழ்கிறது. மார்கழி மாதம் என்றாலே வைணவ கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி:
நடப்பாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில் இரவு முழுவதும் கண்விழித்து சொர்க்கவாசலை பார்த்தால் கோடி புண்ணியம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிது? என்பதை கீழே காணலாம்.
புராணங்களின்படி தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் அச்சுறுத்தி வந்தான். முரனால் மிகவும் வேதனைக்கு ஆளான தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களது துயரத்தைத் தீர்க்குமாறு முறையிட்டனர். அப்போது, முரனிடம் தன்னுடைய திருவிளையாடலை மகாவிஷ்ணு நடத்தினார்.
வரலாறு:
அதாவது, போரில் தான் பின்னடைவது போல ஒரு மாயத்தோற்றத்தை மகாவிஷ்ணு உண்டாக்கினார். பின்னர், ஒரு குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்தார். அந்த குகைக்குள் விஷ்ணு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணு குகைக்குள் இருப்பதைக் கண்டறிந்த முரன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பதற்காக உள்ளே வந்தான்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுபெருமான் மீது தனது வாளை முரன் வீசினான். அப்போது, மகாவிஷ்ணு உடலில் இருந்து சக்தி ஒன்று வெளிவந்தது. அந்த சக்தி பெண் வடிவம் எடுத்தது. அந்த சக்தி முரனுடன் போரிட்டு முரனை வதம் செய்தது.
வைணவ தலங்கள் தயார்:
அசுரனையே தனக்காக வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் மகாவிஷ்ணு. மேலும் முரனை வென்ற நாளும் ஏகாதசி என்று அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் மகாவிஷ்ணு வரம் அருளினார். அப்போது முதல் மார்கழி மாதந்தோறும் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வணங்குகின்றனர்.
தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என தமிழ்நாட்டின் பிரபல வைணவ தலங்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக கொண்டாடப்படும். புகழ்பெற்ற வைணவத் தலங்களில் சொர்க்கவாசல் திறப்பைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். இதற்காக தற்போது முதல் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக கோயில்களில் நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.