திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 66-ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குடத் திருவிழா
திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 66-ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குடத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் இப்பகுதி மக்களின் காவல் மற்றும் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது. மேலும், இங்கு மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தின் 66-ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மஞ்சள் ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், அலகு காவடி, அலங்கார காவடி, பால்குடங்களுடன் பக்தர்கள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர், காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் ஒரு சிறுவன் தனது வாயில் 16 அடி நீள அலகு குத்தி காவடி எடுத்து வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்