உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
SBI ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், வாட்ஸாப் லிங் கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், 'வாட்ஸ் அப் லிங்'கை தொட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாட்ஸ் அப் குழுக்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கி பெயரில், இணையதள லிங்க் பரவி வருகிறது. அதில், 'உங்கள் வங்கி கணக்கில் 7,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. லிங்கை திறந்து பெற்றுக் கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ., பரிசு புள்ளிகளை பணமாக்கி கொள்ளுங்கள். உங்கள் ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைத்துக் கொள்ளுங்கள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. லிங்கை தொட்டு, அந்த பைலை திறந்ததும், வாட்ஸாப் குழுக்களின் ஐகான்கள் மற்றும் பெயர்கள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என மாறி விடுகின்றன.
அடுத்த சில நிமிடங்களில், நாம் எந்தெந்த வாட்ஸாப் குழுக்களில் இணைந்து உள்ளோமோ அந்த குழுக்களுக்கும் அந்த லிங்க் பரவுகிறது. அந்த குழுவில் இருக்கும் யாராவது அந்த பைலை திறந்தால், அடுத்து வேறு குழுக்களுக்கும் இதேபோல் பரவி விடுகிறது. மோசடியான இந்த SBI எஸ்.பி.ஐ., பைலை திறக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
இந்த பைலை திறந்ததும் வங்கி விவரங்களை பதிவிட்ட பின், அவர்கள் தங்கள் மொபைலில் அனுப்பப்படும் ஓ.டி.பி.,யை பதிவு செய்ய இரு முறை நுழைய கேட்டுக்கொள்ளப்படுவர். இந்த ஓ.டி.பி., பரிவர்த்தனையை தெரிந்து கொள்ளும் சைபர் கும்பல், உங்களது வங்கிக்கணக்கில் அனுமதியில்லாமல் நிதியை மாற்றவோ அல்லது பிற மோசடி நடவடிக்கைகளைச் செய்யவோ முடியும்.
வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும். எனவே சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத தொடர்புகளில் இருந்து ஏ.பி.கே. கோப்புகளை டவுன்லோடு செய்ய வேண்டாம். www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகாரளிக்கலாம். இவ்வாறு கூறினர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.