New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025 Celebration: சேலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று இரவு 9 மணியில் இருந்து சேலம் மாநகரில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். சாலைகளில் வேகமாக செல்பவா்கள், மது போதையில் வாகனம் ஓட்டுபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர சேலத்தில் உள்ள முக்கிய பாலங்களான நான்கு ரோடு மேம்பாலம், ஐந்து ரோடு மேம்பாலம், ஏ.வி.ஆா். ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி செல்லும் மேம்பாலம், முள்ளுவாடி கேட் மேம்பாலம் உள்பட மேம்பாலங்களில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்கு மேல் மது அருந்தும் கூடங்கள் செயல்படக் கூடாது. இரவு 1 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம் உள்பட எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை. நீச்சல் குளங்களை மூட வேண்டும். விடுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கியிருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தாண்டையொட்டி மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் 2025-ம் வருட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சேலம் மாநகர காவல் துறை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு உரிமம் பெற்றுள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை கண்டிப்பாக நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும்.
- அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி வளாகம் முழுவதையும் கண்காணிப்பிற்குள் வைத்திருக்க வேண்டும்.
- வளாகத்திற்குள் வரும் வாகன விபரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும்.
- அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் மதுவகைகளை பரிமாறக் கூடாது.
- தற்காலிக மேடையின் உறுதி தன்மை குறித்து சம்மந்தப்பட்ட துறை மூலம் உரிய சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அதன் அருகிலோ தற்காலிக மேடை அமைக்கக்கூடாது.
- நீச்சல்குளங்களை டிசம்பர் 31ந் தேதி மாலை 6 மணிமுதல் ஜனவரி 1ந் தேதி காலை 6 மணிவரை மூடி வைத்தும், மேலும் நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லாததை உறுதி செய்தும் மற்றும் நீச்சல் குளத்திற்குள் எவரும் சென்றுவிடாதபடி தடுப்பு அரண்கள் அமைத்திருத்தல் வேண்டும்.
- மது குடித்து விட்டு வாகனம் ஓட்ட முயற்சிப்பவர்களை தடுத்து அவர்கள் மாற்று வாகனங்களில் வீட்டிற்கு அனுப்பி வைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குடிபோதையில் ரகளை செய்பவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
- கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும், ஆபாசமில்லாமலும் நடத்த வேண்டும்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவரும் வெளிநாட்டவர்களின் விபரங்களை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்திடல் வேண்டும்.
- பெண்களுக்கு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.