(Source: ECI/ABP News/ABP Majha)
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகர் கோயில்... திருத்தணி முருகர் கோயில் சிறப்பம்சங்கள் என்ன ?
Thiruthani Murugan temple: " திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகர் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை "
அறுபடை முருகர் கோயிலில் ஐந்தாவது படைவீடாக உள்ள திருத்தணி முருகர் கோயிலில், சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை என்பது சிறப்பம்சமாக உள்ளது.
முருகரும் அறுபடை கோயில்களும்...
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகன். சங்ககாலத்தில் இருந்தே முருக வழிபாடு என்பது தமிழர் மரபில், இருந்து வந்துள்ளது. இன்றளவும் தமிழ்நாட்டில் பெரும்பாலான நபர்கள் வழிபடும், தெய்வமாக முருகர் இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் முருகர் கோயில்கள் இருந்தாலும், அறுபடை கோவில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமிமலை , திருத்தணி , பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு கோயில்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
அறுபடை கோயில்களில் ஐந்தாவது கோவிலாக, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. தொண்டை நாட்டில் அமைந்துள்ள மிக முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்கி வருகிறது. தேவர்களை அச்சுறுத்தி வந்த, சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து வள்ளி மற்றும் தேவயானியுடன் சாந்த சொற்பமாக காட்சியளிக்கும் கோயிலாக இக்கோயில் உள்ளது.
சூரசம்ஹாரம்
முருகப்பெருமானின் அவதாரம் எடுக்க காரணமே, சூரன் என்ற அசுரனை வதம் செய்ய தான். சூரன் என்ற அசுரன் ஒரு காலகட்டத்தில் தேவர்களுக்கு பல கொடுமையை செய்து வந்தான்.
சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து தோன்றிய, ஆறுமுகன் என்ற முருகப்பெருமான் திருச்செந்தூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று சூரனை வதம் செய்தார். அசுரர்களுடன் முருகன் போர் செய்த நாட்களை, கந்த சஷ்டியாக பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
கந்த சஷ்டியின் பொழுது அனைத்து முருகர் கோயில்களிலும் சூரசம்ஹாரம், மிக விமரிசையாக நடைபெறுகிறது. ஆனால் அறுவடை கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய, திருத்தணி முருகர் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம், நிகழ்ச்சி நடைபெறாது.
சூரசம்ஹாரம் ஏன் நடைபெறுவதில்லை ?
திருத்தணி பெயர் வர காரணமே முருகன் சினம் தணிந்து காட்சியளித்ததால், திருதணிகைமலை என அழைக்கப்பட்டது. சூரனை வதம் செய்த பிறகு கோபம் தனித்து காட்சி தரும் என்பதால் , திருத்தணி முருகர் கோயிலில் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது கிடையாது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து முருகர் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றாலும், திருத்தணி முருகர் கோயிலில் , முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகர் கோயிலில் நடைபெறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை பார்க்க பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் குவியவது வழக்கம். தற்பொழுது, ஆயிரம் டன் பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
திருத்தணி முருகர் கோயில் திருவிழாக்கள்.
ஆடி கிருத்திகை அன்று வட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து வந்து மிகப்பிரமாண்டமாக நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அதேபோன்று ஆடி மாத பரணி நட்சத்திர தினத்தன்று , அன்றும் ஏராளமான பக்தர்கள் திருத்தணி நோக்கி படையெடுப்பார்கள். திருத்தணி முருகர் கோயிலில் நடைபெறும் மிகவும் பிரம்மாண்ட திருவிழாக்களில் ஒன்றாக ஆடி கிருத்திகை திருவிழா இருந்து வருகிறது.
மாசி மாதம் நடைபெறும் பள்ளி கல்யாணம் 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவின்பொழுது தேவயானி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது.