புத்த, சமண, சீக்கிய புனிதப் பயணிகளுக்கு ரூ.10,000 உதவி! விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30!
தமிழக அரசால் வழங்கப்படும் புத்த, சமண, சீக்கிய புனிதப் பயணிகளுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30 என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த புனிதப் பயணிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தைச் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தலா 50 புத்த மதத்தினருக்கும், 50 சமண மதத்தினருக்கும், 20 சீக்கிய மதத்தினருக்கும் என மொத்தம் 120 நபர்களுக்கு, தலா ரூ.10,000 வீதம் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இப்புனிதப் பயணத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்கமும் மேம்படுத்த திட்டம்
மேலும் அந்த செய்திக்குறிப்பில், சிறுபான்மையினர் நலனைப் பேணும் தமிழக அரசின் இந்தத் திட்டம், புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதங்களின் புனிதத் தலங்களுக்குச் சென்று வர ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அவர்கள் ஆன்மீக நிறைவைப் பெறுவதுடன், மத நல்லிணக்கமும் மேம்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 01.07.2025-க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்குப் பொருந்தும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த மானியம், ECS (Electronic Clearing Service) மூலம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
புனிதத் தலங்களின் விவரங்கள்
இந்த நிதியுதவித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட புனிதத் தலங்களின் பட்டியல் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்த மத தொடர்புடைய புனிதத் தலங்கள்
- பீகார்: புத்த கயா (புத்தர் ஞானம் பெற்ற இடம்), ராஜ்கிர் (புத்தரின் போதனைகள் வழங்கப்பட்ட இடம்), வைஷாலி (புத்தர் தனது கடைசி சொற்பொழிவை நிகழ்த்திய இடம்).
- உத்திரப்பிரதேசம்: குசிநகர் (புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த இடம்), வாரணாசியில் உள்ள சாரநாத் கோயில் (புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய இடம்).
- நேபாளம்: லும்பினி (புத்தர் பிறந்த இடம்).
சமண மத தொடர்புடைய புனிதத் தலங்கள்
- ராஜஸ்தான்: தில்வாரா கோவில் (பிரசித்தி பெற்ற சமணக் கோவில்), ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில்.
- ஜார்கண்ட்: சிக்கர்ஜி (பல தீர்த்தங்கரர்கள் மோட்சம் அடைந்த இடம்).
- குஜராத்: பாலிடனா (சமணர்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்று).
- பீகார்: பவபுரி சமண கோவில் (மகாவீரர் நிர்வாணம் அடைந்த இடம்).
- கர்நாடகா: சரவணபெலகோலா (கோமதேஸ்வரர் சிலை அமைந்துள்ள இடம்).
சீக்கிய மத தொடர்புடைய புனிதத் தலங்கள்
- பஞ்சாப்: அமிர்தசரஸ் (பொற்கோயில்), தக்ட் ஸ்ரீ கேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீ டாம்டமா சாகிப்.
- பீகார்: தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங் பிறந்த இடம்).
- மகாராஷ்டிரா: தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (குரு கோவிந்த் சிங் உயிர் நீத்த இடம்).
- பாகிஸ்தான்: குருத்வாரா ஸ்ரீ நான்கானா சாகிப் (குருநானக் பிறந்த இடம்), குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப்.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பப் படிவங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, 2025 நவம்பர் 30-க்குள் கீழ்க்கண்ட முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்:
ஆணையர்,
சிறுபான்மையினர்
நலத்துறை,
கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம்,
சேப்பாக்கம்,
சென்னை - 600 005.
முக்கிய குறிப்புகள்
- விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- 01.07.2025-க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர்களுக்கே இந்த மானியம் வழங்கப்படும்.
- ECS மூலம் நேரடியாக மானியம் வழங்கப்படுவதால், விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் போன்ற தகவல்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்.
- விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் விண்ணப்பப் படிவத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தகுதியுள்ள புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் புனிதப் பயணங்களை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.






















