Anbumani Ramadoss : பாமக தலைவர் நான் தான்...! மெகா கூட்டணி குறித்த அன்புமணி பரபரப்பு தகவல்!
தேர்தல் ஆணையம் பாமகவின் தலைவராக அன்புமணிக்கு வழங்கிய அனுமதியில் எந்த குழப்பமும் கிடையாது, தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஆகஸ்ட் வரை தான் நீடிப்பேன் - அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் : தேர்தல் ஆணையம் பாமகவின் தலைவராக அன்புமணிக்கு வழங்கிய அனுமதியில் எந்த குழப்பமும் கிடையாது, தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஆகஸ்ட் வரை தான் நீடிப்பேன் என்றும் மாம்பழ சின்னமும் தங்களுக்கு தான் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நல்லூவூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூர்ண புஷ்பகலா சமேத ஐயனாரப்பன் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி அவருடைய மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அன்புமணிக்கு பரிவட்டம் கட்டி, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பாமக தலைவர் நான்தான் !
அதனை தொடர்ந்து கீழ்சிவிரியில் நியாய விலைக்கடையை திறந்து வைத்த பின் பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.,
இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2026 ஆகஸ்ட் மாதம் வரை தனக்கு நீடித்திருப்பதாகவும் இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள். இதனை(தலைவர் பதிவியை) ரத்து செய்ய வேண்டும் என வழக்கை தொடர்ந்தார்கள். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அனுமதியை, எனக்கு கொடுத்த அந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்றும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்குள் பிரச்சனை இருந்தால் இதனை சிவில் நீதிமன்றத்தில் வாதம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பலமுறை முயற்சி செய்தும் என்னை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நான் தலைவராக இருப்பேன், தொடர்வேன் அதே போன்று மாம்பழ சின்னமும் எங்களுக்கு தான் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் இதே தீர்ப்பைத்தான் வழங்கினார்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதி, அங்கீகாரத்தை எந்த கருத்தும் நீதிமன்றம் சொல்லவில்லை. அதனால் எந்த குழப்பமும் கிடையாது தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் நீடிப்பேன். மாம்பழ சின்னமும் எங்களுக்கு தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்து அங்கீகாரம் தொடரும். மாம்பழ சின்னம் தொடர்பாக எந்த வாதமும், தீர்ப்பும் கிடையாது. குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.
கலைக்ஷன், கரப்ஷன், கமிஷன்
தமிழகத்தில் விளம்பர மாடல் ஆட்சி தான் நடைபெறுவதாகவும், தமிழ்நாட்டில் இருந்து தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் ஆந்திரா குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்வதாகவும் அதற்கு கலைக்ஷன், கரப்ஷன், கமிஷன் போன்ற காரணங்கள் தான் என குற்றஞ்சாட்டினார். கூகுள் நிறுவனத்திலுள்ள சுந்தர் பிச்சை தமிழ்நாட்டை சார்ந்தவர் அவரே ஆந்திராவில் சென்று முதலீடு செய்கிறார்கள் என்றால் தமிழகத்தில் மெத்தனமாக இருக்கிறார்கள் தொழில் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதை பற்றி கவலையே இல்லை என கூறினார்.
தமிழகத்தில் இறந்தவர்கள் பெயர்களில் போலி வாக்குகாளர்கள் உள்ளதாகவும் இரண்டு இடங்களில் வாக்குகள் உள்ளதை கழிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் ஜெயக்குமார் 50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பதால் அதனை பற்றி கவலை பட வேண்டியதில்லை என்றும் சென்னையில் மழை நீர் வடிவதற்கு எந்த திட்டமிடலும் இல்லை தொலைநோக்கு பார்வை தமிழக அரசுக்கு இல்லை என குற்றஞ்ச்சாட்டினார்.
திமுகவின் கைக்கூலிகள் தான் பாமகவில் குழப்பம் செய்ய முயற்சி
பாமகவில் உள்ள பிளவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் பாமகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது இன்னும் கூடுதலாக வாக்கு வரும் எந்த குழப்பமும் கிடையாது. ஒரு சில திமுக வின் கைக்கூலிகளின் வேலை இது என்றும் திமுகவின் கைக்கூலிகள் தான் பாமகவில் குழப்பம் செய்ய முயற்சி செய்தார்கள். அவை முறியடிக்கப்பட்தாகவும் திமுக என்ன சொல்கிறதோ அதனை இங்கு உள்ள கைக்கூலிகள் செய்து வருகிறார்கள். எது செய்தாலும் அது முறியடிக்கப்படும் என கூறினார்.
தமிழ்நாடு தேர்வாணையத்தில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக அரசு அரசு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் விட்டு விடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து லட்சம் அரசு வேலைகளை நிரப்புவோம் எனக் கூறினார்கள். தற்போது ஏழு லட்சம் வேலைகள் காலியாக உள்ளது. ஆனால் நிரப்பப்படவில்லை. போக்குவரத்து, துப்புரவு பணிகள் தனியார்மையமாக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் நிகழ்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஆன்மீகத்தில் எந்த சேற்றையும், வீசக்கூடாது எந்த பக்கமும் சார்பாக இல்லாமலும் அரசியலும், சர்ச்சையும் செய்யக்கூடாது. நீதிமன்றம் கூறுவதை கேட்க வேண்டும் என கூறினார்.
பலமான மெகா கூட்டணி தமிழ்நாட்டில் அமையும்
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சேராமல் பிரிந்து கிடப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இன்று வரை கூட்டணி அமையாமல் இருப்பதால் உங்களுக்கு குழப்பம் இருப்பது போல் தெரியும். ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒரு மிகப்பெரிய பலமான மெகா கூட்டணி தமிழ்நாட்டில் அமையும். அந்த கூட்டணியில் பாமக இடம்பெறும், பாமக உள்ள கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும். உறுதியாக திமுக கூட்டணி தோல்வியடையும், மிகப்பெரிய தோல்வி அடையும் என்றும் மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதால் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும், கூட்டணி அமைந்தால் எங்கள் அணி வேகமாக முன்னேறி வெற்றி பெறும் என கூறினார்.





















