(Source: ECI/ABP News/ABP Majha)
பட்டீஸ்வரம் கோயிலில் புதிய தேர் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு - பக்தர்கள் மகிழ்ச்சி
இக்கோயிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டீஸ்வரம் கோயிலுக்கு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் புதிய தேர் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் கோயில் நகரம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோயில் நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள கோயில்களை காண பிற மாவட்ட மக்கள் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கும்பகோணம் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில்
இந்த கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் சிவன், பார்வதி தேவி சன்னதிகள் அமைந்துள்ளது. மேலும் ஸ்வர்ண விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், நடராஜர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், சண்முகர் ஆகிய 6 முகங்கள் கொண்ட சண்முகர், சுப்பிரமணியர், துணைவியருடன் சுப்பிரமணியர், சப்தமதாஸ், நவக்கிரகம், மூவர், 63 நாயன்மார்கள் சன்னதிகள் உள்ளன. மேலும் ராமர், பைரவர், திருஞானசம்பந்தர், மாதவரணப் பிள்ளையார், மகாலிங்கம், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், சூரியன், ரேணுகாதேவி, கீர்த்திவாசர், வேதலிங்கம், தண்டபாணி சுவாமிகளும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
கருவறையைச் சுற்றியுள்ள இடத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளும் உள்ளனர். இக்கோயிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டீஸ்வரம் கோயிலுக்கு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாள் உற்சவமாக விமர்சையாக நடைபெறும்.
கோயில் தேர் கட்ட பக்தர்கள் தொடர் கோரிக்கை
ஆனால், கோயிலுக்கு தேர் இல்லாததால் அந்த உற்சவத்தின் போது கட்டுத்தேரைக் கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். இதனால், புதிய தேர் வடிவமைக்க வேண்டும் என்று பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு
அதன்படி தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், இந்த கோயிலுக்கு இலுப்பை மரத்தினால் வடிவமைக்கப்படும் புதிய தேர், திருக்கோவில் நிதியில் ரூ.43 லட்சத்து 50 ஆயிரமும், ஆணையர் பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் என ரூ.87 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
52 டன் எடை கொண்ட தேர்
தேரின் எடை சுமார் 52 டன் ஆகும். 17 அடி அகலத்திலும், மரத்தேர் மட்டும் 22 அடி உயரத்திலும், அலங்காரத்துடன் 48 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த தேர்கட்டுமான பணியை ஒரு நாளைக்கு 10 பேர் வீதம் செய்து வருகின்றனர். தேருக்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் அலங்கார வேலைபாடுகள் உள்ளன. இந்நிலையில், திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் சக்கரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கோவில் சார்பில் தேரோட்டத்திற்கான சாலை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது. தேரை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ரூ.15 லட்சம் மதிப்பில் தேர் கூடாரம் அமைக்க உள்ளது. இவ்வாறு கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கான புதிய தேர் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.