தஞ்சை மாவட்ட பெருமாள் கோயில்கள் களைகட்டியது... புரட்டாசி முதல் சனிக்கிழமையில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாதம் தொடங்கிடுச்சு... பெருமாள் கோயில்களும் திருவிழா கோலத்தில் ஜொலிக்கிறது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி.
தஞ்சாவூர்: புரட்டாசி மாதம் தொடங்கிடுச்சு... பெருமாள் கோயில்களும் திருவிழா கோலத்தில் ஜொலிக்கிறது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
இன்று முதல் சனிக்கிழமை என்பதால் நேற்றைய தினமே பெருமாள் கோயில்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வழிகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதியை சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் பாக்கியம் ஆகும். முடிந்தால் திருப்பதிக்கே சென்று பெருமாளை தரிசிக்கலாம். இல்லாவிட்டாலும் வீட்டில் பெருமாள் படத்தை வைத்து பூஜை செய்யலாம். ஆடம்பர பூஜைகளை விட ஏழைகளின் பூஜைகளைதான் பெருமாள் ஏற்பார். கோவிந்தா நாமம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
துளசியால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு
குறிப்பாக துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானது. சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபட வேண்டும். அப்படி செய்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எப்போதும் மாவிளக்கை ஒற்றை விளக்காக ஏற்றக் கூடாது. இரு தீபங்கள், 4 தீபங்கள் என ஏற்றுவது நல்லது.
தஞ்சை மாவட்ட பெருமாள் கோயில்களில் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அந்த வகையில் தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோயில்களில் இன்று காலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.
கோவிந்தா, வாசுதேவா என பக்த கோஷம்
மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை 4 மணி முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிந்தா, வாசுதேவா என முழங்கியபடி பெருமாளை வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பெருமாளுக்கு துளசி மாலையை வாங்கிச் சென்றனர். வீடுகளில் முதல் சனிக்கிழமை என்பதால் வீட்டை தூய்மைப்படுத்தி சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். இன்றைய தினம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னால் விசேஷமாக இருக்கும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியமான ஒன்று. புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது நன்மையை தரும். இந்த மாதத்தில் சிறந்த விரத முறையை கடைப்பிடித்தால் அந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.