தஞ்சை கரந்தை நவநீதகிருஷ்ணன் கோவிலில் தனுர் மாத சிறப்பு வழிபாடு
வைகுண்ட ஏகாதசியில் துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல், இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமிருந்தால் வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை கரந்தை நவநீதகிருஷ்ணன் கோவிலில் தனுர் மாத சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சாவூர் கரந்தை நவநீத கிருஷ்ணன் கோவில் பிரசித்தி பெற்றது.
இத்தலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணன் கலியுகத்தில் பக்தர்கள் ஏற்படும் கஷ்டங்களை தீர்ப்பதாக ஐதீகம். தனுர் மாதம் எனப்படும் மார்கழி, தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் உகந்த மாதம். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என, பல்வேறு விசேஷங்கள் நடைபெறும் மாதம். இம்மாதத்தில், அதிகாலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கிராமங்களில், வீட்டுவாசலில் பெண்கள் மாக்கோலமிட்டு, பூசணிப்பூ உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். வீதிகளில் பஜனை குழுவினர், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, இறைவனை போற்றுவர்.
தமிழ் மாதங்களான 12 மாதங்களும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டது. அதில், மார்கழி மாதம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மாதங்களில் நான் "மார்கழி மாதமாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் அருளியுள்ளார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் ஒரு கடவுள். இவரவர்களுக்கு இதெது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள்தான்.
இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தவனும் கடவுள்தான். எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீ கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய்மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது. மார்கழி மாதம் விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர்.
அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜைகள் செய்தனர். விரதம் இருந்தனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கும் ஒரு தனிப் பெருமை கிடைத்தது. அந்தக் காலத்தில் பிரம்ம முகூர்த்தத்தில்தான், திருமணம் நடத்துவார்கள். சூரியனின் இயக்கம் அயனம். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயணம். இவை இரண்டில், உத்தராயணம் உயர்ந்தது என்பார்கள்.
தட்சிணாயனத்தில் கடைசி மாதம் மார்கழி மேலும், உத்தராயண தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21ஆம் தேதி. இத்திருநாள் மார்கழியின் ஒரு நாள். இந்த நாளில் சில கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. மார்கழியில் அமைந்த மிக முக்கியமான வழிபாடுகள். மார்கழி மாத விரதம், பாவை விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம், திருவாதிரை, போகிப் பண்டிகை என 4 முக்கியமான வழிபாடுகள் உள்ளது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் எல்லா இந்து மக்களாலும் இத்தினத்தில் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்ச்சியாகும்.
வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தனுர் மாத 2-ம் நாளை முன்னிட்டு தஞ்சாவூர் கரந்தை ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.